வங்கிக் கிளைகள் அனைத்திலும் தமிழ் மொழியில் படிவங்கள்


சென்னை ஆர்.ஏ.புரம் 'பாரத் ஸ்டேட் வங்கி' கிளையில் லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் பட்ட இன்னல் குறித்து, மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடந்த 29.12.2021 அன்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு அவ்வங்கியின் தலைமை பொது மேலாளர் திருமிகு தேவேந்திர குமார் பதில் அளித்துள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

வாடிக்கையாளர்களுக்கான படிவங்கள் மாநில மொழிகளில் இருப்பதை உறுதிசெய்வது தொடர்பாக வங்கியின் தலைவருக்கு 29-12-2021 அன்று நீங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றோம். உங்கள் கருத்துக்களை முழுமையாக பின்பற்றுவோம். வாடிக்கையாளர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கும், வங்கி சேவைகளை எளிதாக்கவும், சீரிய நுகர்வோர் தொடர்பிற்கும் வழி செய்யும் வகையில் நாங்கள் வங்கியின் படிவங்கள் மற்றும் இதர எழுதுபொருட்களை மாநில மொழி உட்பட மும்மொழிகளில் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்.

அதன்படி மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய வங்கியில் பணம் எடுத்தல் , செலுத்துதல் மற்றும் சேமிப்பு, புதிய கணக்கு துவக்கம் , வாடிக்கையாளர் சேவை, வரைவோலை / RTGS / NEFT தொடர்பான பல்வேறு தனிநபர்களுக்கான படிவங்கள் அனைத்தும் ஏற்கனவே வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக தமிழில் வழங்கப்பட்டுள்ளது. குறைவாகப் பயன்படுத்தப்படும் சில படிவங்களும் கூட தமிழில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். விரைவில் அவை கிடைக்கும்.

உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட கிளைக்கு ஏற்கெனவே மாநில மொழியில் லாக்கரை திறப்பதற்கான பதிவேடு வழங்கப்பட்டுவிட்டது. மாநில மொழிகளில் அனைத்துப் படிவங்களையும் கட்டாயம் வழங்க வேண்டுமெனவும், தேவையெனில் மேலும் புரிதலுக்காக உள்ளடக்கங்களை வாடிக்கையாளர்களுக்கு விளக்கவும் எங்களது அனைத்து பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளையும் அறிவுறுத்தியுள்ளோம். சிறந்த வாடிக்கையாளர் சேவையை சற்றும் தளர்வின்றி வழங்குவோம் என பாரத ஸ்டேட் வங்கியின் சார்பாக உறுதியளிக்கிறோம்.

உங்கள் கருத்துகளுக்கும், வழிகாட்டுதலுக்கும் எங்களின் நன்றி. இதை நாங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ஒரு நல்வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை வரவேற்று சு.வெங்கடேசன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொங்கல் விழாவினையொட்டி பாரத் ஸ்டேட் வங்கியின் சார்பில் இவ்வுறுதி அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்துக்கான சிறந்த பொங்கல் பரிசாகும். வங்கியின் பொது மேலாளருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் நிலையத்திலும் தமிழ் படிவங்களை உறுதிசெய்வதில் வெற்றி பெற்றோம். இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் தமிழ் படிவங்களை உறுதி செய்வோம். அதற்கான முதல் வெற்றி பாரத ஸ்டேட் வங்கி மூலம் கிடைத்துள்ளது. அனைவருக்கும் மீண்டும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

x