குமரி கிழக்கு கடல் பகுதியில் 61 நாள் தடைக் காலம் முடிவு: கடலுக்குச் செல்ல தயாராகும் சின்னமுட்டம் மீனவர்கள் 


சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு செல்ல தயார் நிலையில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நாகர்கோவில்: குமரி கிழக்கு கடல் பகுதியில் 61 நாள் மீன்பிடி தடைக் காலம் நாளையுடன் முடிவடைவதால் 15-ம் தேதி முதல் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனப்பெருக்க காலமாக உள்ளது. இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடித்தால் மீன் இனம் அழிய வாய்ப்புள்ளது. எனவே இதை காக்கும் வகையில் மீன்களின் பெருக்கத்தையும் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் தமிழக கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் அமுலுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 320-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் களை இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது. தடைக்காலத்தைப் பயன்படுத்தி மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை சீரமைத்தனர். மேலும், மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தினார்கள்.

மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆயத்தமாகியுள்ளனர். இதையடுத்து கரையேற்றி பழுதுபார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கி, அந்த படகுகளில் டீசல் மற்றும் தண்ணீர் நிரப்பும் பணிகளை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். விசைப்படகுகளில் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் ஏற்றப்பட்டு வருகிறது.

மேலும், படகுகளில் உள்ள குளிர்சாதன கிடங்குகளில் மீன்களை பதப்படுத்தி வைத்து, கொண்டு வருவதற்காக ஐஸ் கட்டிகளை நிரப்பி வருகிறார்கள். இதையடுத்து நாளை மறுதினம் அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றன.

மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகுகள் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து டோக்கன் பெற்றுக் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு நெய்மீன், பாறை. விளமீன், சூறை நெடுவா, திருக்கை, சூரை, இறால் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் மீன்களின் விலையும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.