கர்நாடகச் சிறையிலிருந்து விடுதலைபெற்ற தமிழ்க் கல்வெட்டுகள்!


கிருபாகரன் என்ற பெயரைக் கேட்டதுமே உயர் நீதிமன்றத்தில் அவர் வழங்கிய சில அசத்தலான தீர்ப்புகளும், அதிரடித் தீர்ப்புகளும் நினைவுக்கு வரும். அவர் ஓய்வுபெற்றுச் சென்று 6 மாதங்களாகிவிட்டது. இப்போதும் அவரது பெயர் பேசப்படுகிறது. காரணம், சேகரிக்கப்பட்டும், படியெடுக்கப்பட்டும் கர்நாடகத்தில் முடங்கிக்கிடந்த தமிழ்க் கல்வெட்டுகள் மீண்டும் தாய்த்தமிழ் மண்ணுக்கே வந்து சேர்ந்திருக்கின்றன. அதற்கு நீதியரசர் கிருபாகரன் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்புதான் காரணம்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைந்ததால், விளைந்த நல்விளைவுகளில் ஒன்றென இதைச் சொல்லலாம். காரணம், தென்தமிழகம் தொடர்பான பல பொதுநல வழக்குகள் தொடரப்படவும், அதில் நல்ல தீர்வு கிடைக்கவும் மதுரைக் கிளை உறுதுணையாக இருந்தது. தமிழகத்தின் பண்பாட்டுத் தலைநகரம் என்று போற்றப்படும் மதுரை, வரலாற்று ரீதியாகவும், தொல்லியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல நினைவுச் சின்னங்களைக் கொண்டது. கீழடி அகழாய்வு வேறு தென்மாவட்ட மக்களின் தொல்லியல் ஆர்வத்தைத் தூண்டியது. அதன் காரணமாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அதுதொடர்பான வழக்குகள் பல தொடரப்பட்டன.

அதில் ஒன்று, மைசூருவில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தையும் சென்னையில் இருக்கும் தமிழ்க் கல்வெட்டியல் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது. மதுரையைச் சேர்ந்த மணிமாறன் தான் இதுதொடர்பாக முதல் வழக்கைத் தாக்கல் செய்தார்.

“இந்தியாவிலேயே கல்லில் எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்கள் (கல்வெட்டுகள்) அதிகம் கிடைத்தது தமிழ்நாட்டில்தான். இந்தியாவில் இதுவரையில் படியெடுக்கப்பட்ட 86 ஆயிரம் கல்வெட்டுகளில், 27 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். மற்றவை சம்ஸ்கிருதம், பாரசீகம், அரபி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளைச் சேர்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை அலுவலர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தமிழ்க் கல்வெட்டுகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே அவர்கள் குறைத்துக் காட்டினர். சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகள் இருக்கின்றன என்பதற்குப் புத்தக ஆதாரங்களே இருக்கின்றன. இதுவரையில் படியெடுக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், செப்பேடுகளும் பெங்களூருவில் உள்ள மத்திய தொல்லியல் துறையின் மண்டல அலுவலகத்தில்தான் பாதுகாக்கப்படுகின்றன. மைசூருவில் உள்ள பழைய கல்வெட்டுத் துறை அலுவலகத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு இந்த ஆவணங்களை எல்லாம் மாற்றியபோது, பல கல்வெட்டுகளும், படியெடுத்த பிரதிகளும் சேதமடைந்துள்ளன. எஞ்சியவையும் போதிய பாதுகாப்பின்றியும், பராமரிப்பின்றியும் உள்ளன. அவற்றைத் தமிழகம் கொண்டுவர வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்தார் மணிமாறன்.

“மைசூர் கல்வெட்டியல் துறையில் உள்ள ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழுடன் தொடர்புடையவை. இந்தக் கல்வெட்டுகள் தற்போதுவரை புதுப்பித்து வெளியிடப்படவில்லை. எனவே, மைசூருவில் கல்வெட்டியல் துறையின் கீழ் உள்ள தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகளைத் தமிழகத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை நவீன தொழில்நுட்ப முறையில் பாதுகாக்கவும், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

அந்த மனு வழக்கை விசாரித்துவந்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர்வு கடந்த 19.8.2021 அன்று முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கியது. "சென்னையில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளையை, தமிழ்க் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்கள், தமிழ்க் கல்வெட்டுகள் அனைத்தையும் சென்னை தமிழ்க் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்துக்குள் மாற்ற வேண்டும். மத்திய தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு உள்பட அனைத்துப் பிரிவுகளில் போதுமான நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டும். சென்னை கல்வெட்டியல் பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும்" என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

நீதிமன்றம் சொன்ன கெடு இதோ முடியப்போகிறது; மத்திய தொல்லியல் துறையும், தமிழக அரசும் என்ன செய்யப்போகிறது என்று தொல்லியல் ஆர்வலர்கள் எல்லாம் பதைபதைப்போடு காத்திருந்தபோது, மகிழ்ச்சியான உத்தரவைப் பிறப்பித்தது இந்திய தொல்லியல் துறை. அந்த உத்தரவில், நீதிமன்ற உத்தரவின்படி சென்னையில் இயங்கிவரும் இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டியல் கிளை இனி, தமிழ்க் கல்வெட்டியல் கிளை என்று அழைக்கப்படும் என்றும், மைசூரு இயக்குநர் அலுவலகத்தில் உள்ள தமிழ் தொடர்பான கல்வெட்டுகள், மைப்பிரதிகள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் ஆவணங்களும் உடனடியாக சென்னை துணை இயக்குநர் அலுவலகம் (தமிழ்க் கல்வெட்டியல்) மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்த மணிமாறன், வழக்கறிஞர் அழகுமணி, முத்தாலங்குறிச்சி காமராசு, பொதுவெளியில் கோரிக்கை விடுத்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர்.

மேலும், தமிழ் ஆவணங்களில் பெரும்பாலானவை தென்தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பதால், சென்னைக்கு ஆவணங்கள் அனைத்தும் வந்ததும் அதை இன்னொரு பிரதியெடுத்து மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச்சங்க வளாகத்திலும் காட்சிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

x