இட ஒதுக்கீடு விவகாரம்: நடிகர் சூர்யா பெயரில் போலி அறிக்கை?


சூர்யா

இட ஒதுக்கீடு தொடர்பாக நடிகர் சூர்யா பெயரில் வெளியான அறிக்கை போலியானது என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சினிமா தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சூர்யா

நடிகர் சூர்யா பெயரில் இன்று அறிக்கை ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி இருந்தது. அதில், ‘இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதற்கான சட்டப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்கள் நலனுக்கான இயக்கங்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அவர்களோடு நானும் அகரம் அறக்கட்டளை சார்பாக இணைந்து கொள்கிறேன்.

4 ஆயிரம் மருத்துவக் கல்வி இடங்கள், இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கிடைக்க இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர்கல்வியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களுடைய மொத்தப்பதிவுச் சுட்டெண் (Gross Enrolement Ratio) தேசிய மற்றும் மாநில சராசரிகளை விட அதிகம். எனவே, இந்தத் தீர்ப்பானது ஒரு வருடத்திற்கு 800-க்கும் மேற்பட்ட கொங்கு மண்ணைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ - மாணவியர்களின் மருத்துவக் கல்விக் கனவை நனவாக்கும் என்பது எனது நம்பிக்கை. சமூக நீதிப்பாதையில் தொடர்ந்து தமிழ்நாடு வீறு நடைபோடட்டும். என்றும் நாமும் உடன் நிற்போம்’ என கூறப்பட்டு இருந்தது. அதில் நடிகர் சூர்யாவின் கையெழுத்தும் இருந்தது.

இந்த அறிக்கை பரபரப்பான நிலையில், இது சூர்யா பெயரில் வெளியான போலி அறிக்கை என்று 2டி நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பதிவில், சூர்யா பெயரில் வெளியான அந்த அறிக்கையைப் புறக்கணிக்குமாறும் இந்தப் போலியான அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

x