தமிழக துப்பாக்கி சுடும் மையங்களின் பாதுகாப்பு; ஆய்வுக் குழு அமைத்தார் டிஜிபி


டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தில் உள்ள துப்பாக்கி சுடும் மையங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்து உறுதிசெய்யக் குழு அமைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை பகுதியில் அரசு துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கடந்த 30-ம் தேதி மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 2 கிமீ தொலைவில் இருந்த 11 வயது சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனான்.

இந்த விபத்து தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘வண்டலூர் காவலர் பயிற்சி அகாடமி இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் உள்ள பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இந்த ஆய்வில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்கள் மலைக்குன்றுகள் சூழ்ந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடங்களில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரத்யேகத் தடுப்புகள் எழுப்பி குண்டுகள் வெளியே செல்லாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படும். துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த, வேறு ஏதாவது ஆலோசனை வழங்க வேண்டும் என்றால் இந்தக் குழு வழங்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

x