தமிழகத்தில் சில இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பை தயாராக இல்லாததால், ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தங்களின் துணிப்பைகளைக் கொண்டுவந்து பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில பகுதிகளுக்கு பைகள் முழுமையாக வந்து சேராததால் விநியோகம் தாமதமாகி வருகிறது.
ஒமைக்ரான் பரவல் கட்டுப்பாடுகளால், சில இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புப் பைகள் தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் தாமதம் இன்றி மக்களுக்கு விரைவாக வழங்கவேண்டும் என்று அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதனால், பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் துணிப்பைகளைக் கொண்டுவந்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் 20 பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பைகள் இல்லாமல் பரிசுத் தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்கு தனியே டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.
பைகள் இன்றி பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறுவோர் பின்னர் ரேஷன் பொருட்கள் வாங்கும்போது, டோக்கன்களைக் கொடுத்துப் பைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைகளின்படி மக்களுக்கு விரைந்து பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குமாறு பொது விநியோகத் திட்ட அலுவலர்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.