சென்னை புறநகர் மின்ரயில்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே பயணத்துக்கு அனுமதி என தெற்கு ரயில் அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இதுவரை சுமார் 22 கோடி பேரை தாக்கியுள்ளது. இந்தியாவில் 3,071 பேர் தற்போது வரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் கரோனா பாதிப்பு 1,41,986-ஐ கடந்துள்ளது.
இந்நிலையில், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலானது 3-வது அலை பரவல் மற்றும் சமூகப் பரவலாக உருவெடுத்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 10,000-ஐ நெருங்கியுள்ளது.
இதற்கிடையே, தமிழகம் முழுதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இருப்பினும் அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், உணவு, பத்திரிகை உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பயணம் செய்ய ஏதுவாக, சென்னையில் நாளை 343 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். வழக்கமாக 670 மின்சார ரயில் சேவையில், நாளை 343 சேவை மட்டுமே இயக்கப்படவுள்ளது. அதேநேரத்தில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 10-ம் தேதி முதல் ஜன.31-ம் தேதிவரை சென்னை புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான சான்றை டிக்கெட் கவுன்ட்டர்களில் காண்பித்துப் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். ஏற்கெனவே சீசன் டிக்கெட் எடுத்தவர்க;s கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றை உடன் வைத்திருக்க வேண்டும். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெற முடியாது. ரயில் பயணத்தின்போது ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும்; முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.