நீலகிரி சுற்றுலா தலங்களில் பார்வை நேரம் குறைப்பு


தாவரவியல் பூங்கா

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் நாளை(டிச.8) முதலாக, காலை 10 முதல் மதியம் 3 மணிவரை மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களான தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா ஆகியவற்றை பார்வையிட, தினந்தோறும் காலை 7 முதல் மாலை 6.30 மணிவரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஒமைக்ரான் வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் ஆகிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால், சுற்றுலாத் தலங்கள் மூடப்படவில்லை.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பார்வை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிட நாளை(டிச.8) முதல் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, ‘‘மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே, சுற்றுலா தலங்களின் உள்ளே அனுமதிக்கப்படுவர். அதேபோல் நேர கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வருகின்றன. உதகைப் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் காலை 10 முதல் மதியம் 3 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, கரோனா தொற்று விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தவறுவோருக்கு பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 சட்டத்தின்கீழ் தொடர்ச்சியாக அபராதம் விதிக்கப்படும்’’ என்றார்.

x