பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்; டிச.6 போராட்ட வழக்கு ரத்து


பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நெல்லை மாவட்டம் களக்காடு முகமது உமர் அப்துல்லா, உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து 2020 டிசம்பர் 6-ல் ஏர்வாடி பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டவிரோதமாகக் கூட்டம் கூடியதாகவும், சமூக இடைவெளி இல்லாமல் கூடியதாகவும் ஏர்வாடி போலீஸார் எங்கள்மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை என்ற பெயரில் போலீஸார் எங்களைத் துன்புறுத்தி வருகின்றனர். இதனால் வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. இஸ்லாமியர்களின் புனித இடமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது இஸ்லாமியர்களால் மறக்க முடியாத நிகழ்வு. இதைக் கண்டித்து ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். இப்போராட்டத்தின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை. அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது. இதனால் ஏர்வாடி போராட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.

x