நடந்துவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பொன்னகரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான பாமக கோ.க.மணி பேசுனார். அப்போது அவர் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (7 ஜன.) பதிலளிக்கும் வகையில்:
பெண் குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு உட்பட்டால் தொடர்புடைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து நானே காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.
இது தொடர்பாக 24 ஆயிரத்து 513 முகாம்கள் பள்ளிகள், கல்லூரிகளில் நடத்தப்பட்டுள்ளன. 249 விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடத்தப்பட்டுள்ளன. போக்சோ வழக்குகளை விசாரிக்க திண்டுக்கல், தேனி, தருமபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு எதிரான புகார்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2363 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சென்னையில் பதிவு செய்யப்பட்ட 338 வழக்குகளில் 135 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டுமென நான் அறிவுறுத்தியதற்கு ஏற்ப மே மாதத்திற்கு பிறகு சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் 19.5.2021 அன்று போடப்பட்ட போக்சோ வழக்கொன்றில் 23 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு 82 நாட்களில் முடிந்தது. 31.8.2021 அன்று தண்டனையே வழங்கப்பட்டுவிட்டது.
ஆகவே இதுபோல முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையை விரைவுபடுத்துவது ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.