தமிழகத்தில் இந்த மாதம் குறிப்பிட்ட 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படிருக்கும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கரோனா காரணமாக இரவுநேர ஊரடங்கு நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணியில் இருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்கூட்டியே மதுப்பிரியர்கள் தட்டுப்பாடின்றி மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இந்த ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் விடுமுறை தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர், அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ‘ஜன.15-ம் தேதி திருவள்ளுவர் தினம், 18-ம் தேதி வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு தினம், 26-ம் தேதி குடியரசு தினம் என்பதால், இந்த நாட்கள் மதுபான விற்பனையில்லா நாட்களாக அனுசரிக்கப்பட இருக்கின்றன. இதையொட்டி மேற்கண்ட நாட்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அரசு உரிமம்பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல்வைக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கை அறிவித்துள்ளது. அதனால், அன்றைய தினங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்படலாம் என மதுப்பிரியர்கள் மத்தியில் பேச்சாக உள்ளது.