பொங்கல் திருநாளையொட்டி, அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ரேஷன் கடைகளில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த மூன்றாண்டாக பொங்கல் பரிசுத் தொகுப்பின்போது, பொங்கல் பரிசுத் தொகுப்போடு, ரொக்கமும் வழங்கப்பட்டதும் இப்போது வழங்கப்படாததும் பேசு பொருளாகியிருக்கிறது. இந்தச் சூழலில் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் வந்த கதையையும், அதில் ரொக்கமும் சேர்ந்த கதையையும் ரீவைண்டிங் செய்வோம்.
தொடங்கிவைத்த கருணாநிதி
2009-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு முன்பாகத்தான் முதன்முதலாக ‘பொங்கல் பரிசுப் பை’ திட்டத்தை அன்றைய முதல்வர் கருணாநிதி தொடங்கினார். சத்துணவுத் திட்டம்போல இதுவும் ஒரு கவர்ச்சிக்கரமான திட்டமாக மாறும் என்பதை, அன்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 2008-ல் தமிழ்ப் புத்தாண்டை தை முதல் தேதிக்கு திமுக அரசு மாற்றியிருந்தது. அதையொட்டிதான் இத்திட்டம் முதன்முறையாகத் தொடங்கப்பட்டது. என்றாலும் 2009 ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் வர இருந்தது. அதோடு, 2009 ஜனவரி 9-ல் புகழ்பெற்ற திருமங்கலம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்திட்டத்தின் பின்னணியில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.
திருமங்கலம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இத்திட்டம் பிரதானமாகப் பேசப்பட்டது. திருமங்கலத்தில் கருணாநிதி பங்கேற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்றைய காங்கிரஸ் எம்எல்ஏவும், இன்றைய சிறுபான்மையின ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ், “இந்தக் கூட்டத்துக்கு வரும் முன்பு வீட்டில் மணக்க மணக்க சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டு வந்தேன்” என்று இத்திட்டத்தைப் பற்றி சிலாகித்து பேசிவிட்டுத்தான், மற்ற விஷயங்களுக்கேச் சென்றார்.
அப்போது அரை கிலோ பச்சரிசி, அரை கிலோ வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை 20 கிராம் என்ற அளவில்தான் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது இத்திட்டத்துக்கு ஆன மொத்த செலவு 80 கோடி ரூபாய்.
முடக்கிவிட்டு மீண்டும் தொடங்கிய ஜெயலலிதா
இத்திட்டம் திமுக ஆட்சியில் இருந்த 2011 பொங்கல் வரை செயல்படுத்தப்பட்டது. 2011 அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2012-ல் பொங்கல் பரிசுப் பை எதுவும் வழங்கப்படவில்லை. திமுக ஆட்சியில் வந்த பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதைப் போல, இதுவும் கிடப்பில் சென்றதாகவே கருதப்பட்டது. ஆனால், 2013-ல் பொங்கல் திருநாளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை மீண்டும் அறிவித்து ஆச்சரியமூட்டினார் ஜெயலலிதா. அரை கிலோவாக இருந்த பச்சரிசி, சர்க்கரை 1 கிலோவாக உயர்த்தப்பட்டது. கரும்புடன் 100 ரூபாய் முதன்முறையாக ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. அதாவது, சர்ச்சரை பொங்கலைச் செய்ய தேவைப்படும் இதரப் பொருட்களை வாங்க இந்தத் தொகை வழங்கப்பட்டது. 2014 மக்களவைத் தேர்தல் நேரம் என்பதால், அந்த ஆண்டிலும் 100 ரூபாய் ரொக்கத்துடன் இத்திட்டம் தொடர்ந்தது. அப்போது இத்திட்டத்துக்கான செலவு 280 கோடி ரூபாய்.
ஆனால், 2015 பொங்கலுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவில்லை. 2014 செப்டம்பர் 27 அன்று ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குச் சென்றதால், முதல்வர் பதவியை இழந்தார். முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளிவந்த பின்னர், போயஸ் கார்டனை விட்டு எங்குமே செல்லாமல் இருந்தார் ஜெயலலிதா. அதிமுகவினர் எல்லோரும் துயரகரமான தருணத்தில் இருந்தனர். அதன் வெளிப்பாடாக 2015-ல் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்படவேயில்லை. ஆனால், 2015 மே மாதத்தில் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். 2016-ல் சட்டப்பேரவைத் தேர்தல் ஆண்டு. அந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டது. அதோடு 100 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.
1,000 ஆன 100
2016 டிசம்பர் 5-ல் ஜெயலலிதா மறைந்த தருணத்திலும், முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் 2017-ல் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார். ஆனால், 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்படவில்லை. இதன்பின்னர் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, 2018-ல் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தார். அப்போதும் 100 ரொக்கம் வழங்கப்படவில்லை. மீண்டும் 2019 பொங்கல் பண்டிகைக்குதான் பொங்கல் பரிசுத் தொகுப்போடு 1,000 ரூபாய் ரொக்கத்தையும் அறிவித்து மக்களைத் திக்குமுக்காட வைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், 2019-ல் மக்களவைத் தேர்தலும் 22 தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதற்காகத்தான் அந்த 1,000 ரூபாய் என்ற விமர்சனம் எழவும் இது வழிவகுத்தது.
2020-ம் ஆண்டிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பும், 1,000 ரூபாய் ரொக்கமும் வழங்கும் திட்டம் தொடர்ந்தது. 2019 டிசம்பர் இறுதியில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை தொடர நீதிமன்றம் வரை சென்று தடை வாங்கப்பட்டது. தேர்தல் முடிவு ஜனவரி 2-ல் வெளியான பிறகுதான், இத்திட்டத்தைத் தொடங்கி வைக்க அதிமுக அரசால் முடிந்தது. இந்த இரு ஆண்டுகளிலும் இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகை 2,363 கோடி ரூபாய்க்கும் அதிகம்.
2,500 ஆன 1,000
2021-ல் முன் எப்போதும் இல்லாத அளவில் பொங்கல் பரிசுத் தொகுப்போடு 2,500 ரொக்கமும் அறிவித்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுக்கும் விமர்சனத்துக்கும் அது வழிவகுத்தது. அதற்கு முன்பு 1000 ரூபாய் வழங்கிய எடப்பாடி பழனிசாமி அரசு, 2,500 ரூபாயாக அதை உயர்த்தியதில், தேர்தல் பின்னணி இல்லை என்பதை அதிமுகவினராலேயே மறுக்க முடியாது என்பதே உண்மை. இத்திட்டத்துக்காக செலவான மொத்தத் தொகை 5,604 கோடி ரூபாய்.
2022 பொங்கல் திருநாளுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன்றரை மாதத்துக்கு முன்பே அறிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் அல்லது பொங்கலுக்கு முன்பாக நடைபெறும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் திமுக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்துக்கான செலவு செலவு 1,088 கோடி ரூபாய். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக 1,000 ரூபாய், 2,500 ரூபாய் எனப் பொங்கல் பரிசு ரொக்கம் பெற்ற மக்கள், இந்த ஆண்டும் ஏதாவது ரொக்கம் அறிவிக்கப்படும் என்று கடைசிவரை எதிர்பார்த்தனர் என்பதே உண்மை.
பொங்கல் பரிசுப் பை அல்லது பொங்கல் பரிசுத் தொகுப்பு என வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட இத்திட்டம், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் ரொக்கம் வழங்குவதை அறிமுகப்படுத்தியது அதிமுக அரசுதான். தேர்தலை மனதில் கொண்டு ரொக்கம் வழங்குவதைச் செயல்படுத்தியிருந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு அது பெரும் உதவியாக இருந்ததையும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.