‘புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பேரவையில் இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "மயிலாடுதுறை, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விரைவில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில், அடுத்து வரும் ஆண்டுகளில் அம் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.