கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு நிலம் கொடுக்க மக்கள் மறுப்பு


கீழடி

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிலம் கொடுக்க மாட்டோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் இதுவரை 7 கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் கீழடி கொந்தகை அகரம் மணலூர் அகழாய்வு நடந்த இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவிப்பதாக அறிவித்தார். தற்போது கீழடியில், 7-ம் கட்ட அகழாய்வு முடிந்த நிலையில், ‘இந்த இடம் திறந்தவெளி அருங்காட்சியமாக இருக்கும், மக்கள் எப்பொழுதும் வந்து பார்த்து செல்லலாம்’ என்று அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அகழாய்வு நடைபெற்ற 4 இடங்களில் கீழடியில் 6 ஏக்கர், மற்ற 3 இடங்களில் தலா ஒரு ஏக்கர் அளவில் அகழ் வைப்பகம் அமைக்க நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக, திருப்புவனத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் நிலம் தர மறுப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதற்கு முன்பாக அகழாய்வு செய்த இடங்களை அகழாய்வுக்குப் பிறகு குழிகளை மூடி விவசாயிகளிடமே அரசு நிலத்தைத் திருப்பிக் கொடுத்து விடும். விவசாயிகள் மறுபடியும் அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது, 7-ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை திறந்தவெளி அருங்காட்சியமாக தமிழக அரசு அறிவித்திருப்பது அகழாய்வுக்கு நிலத்தை கொடுத்த விவசாயிகளிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “7-ம் கட்ட அகழாய்வுக்குப் பிறகு குழியை மூடித்தருவதாகக் கூறித்தான் எங்களிடம் நிலத்தை வாங்கினார்கள். தற்போது அது திறந்தவெளி அருங்காட்சியகமாக இருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததால் நாங்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம். அதிகமான தென்னை மரங்களை வளர்த்து வருகிறோம். அதை நம்பித்தான் எங்களின் வாழ்வாதாரமே இருக்கிறது. எங்கள் நிலத்தை அரசு கைப்பற்ற முயற்சிப்பதை நாங்கள் விருப்பமில்லை. மேலும், 8-ம் கட்ட அகழாய்வுக்கு எந்த நிலத்தையும் தரமாட்டோம்” என்று கீழடி நிலம் கொடுத்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

x