துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: ஆளுநருடன் மோதும் மாநிலங்களில் தமிழகமும் சேர்கிறதா?


முதல்வர் - ஆளுநர்

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று பேசியிருக்கிறார். இதன் மூலம் ஆளுநர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டிருக்கும் மாநிலங்களின் வரிசையில் தமிழகமும் சேர்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மாநிலந்தோறும் பல்கலைக்கழக் துணைவேந்தர்களை, அவற்றின் வேந்தர்களான மாநில ஆளுநர்களே நியமிப்பது வழக்கம். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இந்த துணைவேந்தர் நியமன விவகாரம் அதிகார மோதலுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த மோதல் வெளிப்படையாக வெடித்தது. மேற்கு வங்கத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி முதல்வரே இருப்பார் என திரிணாமுல் அமைச்சர்கள் சொல்லி வருகிறார்கள். துணை வேந்தர்கள் மதிப்பதில்லை என அம்மாநில ஆளுநர் வெளிப்படையாகவே புலம்பி வருகிறார். மகாராஷ்டிரத்தில் இதற்கென தனியாக சட்டத் திருத்த மசோதாவே நிறைவேற்றி இருக்கிறார்கள். தற்போது தமிழக சட்டப்பேரவையும் இந்த விவாதப் புள்ளியை தொட்டிருக்கிறது.

இன்றைய(ஜன.6) சட்டப்பேரவை நிகழ்வுகளின் அங்கமாக, பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உறுப்பினர் ஜி.கே மணி எழுப்பினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. உரிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மார்ச்சில் கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் இவை தொடர்பாக விவாதிக்கப்பட்டு உரிய முடிவெடுக்கப்படும் என்றும், அதற்கான சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றும் என்றும்’ தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரே நீடிப்பாரா, அவரது அதிகாரங்கள் மறுவரையறைக்கு ஆளாகுமா, துணைவேந்தர்கள் நியமனம் எந்த வகையில் தீர்மானிக்கப்பட உள்ளது.. ஆகியவற்றைப் பொறுத்தே ஆளுநருடனான மாநில அரசின் உரசல் தெளிவாகும். சட்ட திருத்த மசோதா குறித்து முதல்வர் கோடிட்டு காட்டியிருப்பதை வைத்து, தமிழக அரசு மகாராஷ்டிராவை முன்மாதிரியாக கொள்ளும் எனத் தெரிகிறது. சட்டத் திருந்த மசோதாவுடன், மாநிலத்தில் உயர்கல்வி அமைச்சரை இணை வேந்தராக நியமித்து, வேந்தரின் பணிகளை இணைவேந்தர் மேற்கொள்ளவும் மகாராஷ்டிரத்தில் முடிவாகி இருக்கிறது.

பல்கலைக்கழக வேந்தர் என்ற அதிகாரம், அரசியல் சாசனத்தின்படி வழங்கப்பட்டதல்ல. மாநில அரசின் கீழுள்ள பல்கலைச் சட்ட விதிகளை பின்பற்றியே வழங்கப்பட்டவை. விரும்பும் மாநில அரசுகள் இவற்றில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநரின் அதிகாரத்தை மறுவரையறை செய்யலாம். மகாராஷ்டிரா நிறைவேற்றியுள்ள பொதுப் பல்கலைகழகங்கள் சட்டத் திருத்த மசோதா இந்த வகையிலேயே அரங்கேறி இருக்கிறது. அப்படியொரு சட்டத் திருத்த மசோதா தமிழகத்தில் கொண்டுவரப்பட்டால் பல்கலைக்கழக விவகாரங்களுக்கு அப்பால், தமிழகம் முன்வைக்கும் மாநில சுயாட்சி குரலுக்கும் உரியதாக அமையும். எனவே தற்போதைய தமிழக அரசு மகாராஷ்டிர மாதிரியை பின்பற்றவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

x