மதுரையில் சிற்றுந்து ஓட்டுநரால் கர்ப்பமான 17 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 17 வயது மகளின் வயிற்றில் வளந்து வரும் கருவை கலைக்க அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இன்று பிறப்பித்த உத்தரவின் விவரம் வருமாறு:
மனுதாரரின் 17 வயது மகள் தினமும் சிற்றுந்தில் பயணம் செய்த போது அந்த பேருந்தின் ஓட்டுநர் தங்கபாண்டி (44) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்மூலம் அவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்று, தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். தங்கபாண்டி மீது வாடிப்பட்டி போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனையில் சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். 20 வாரத்தை தாண்டிய கருவாக இருப்பதால் அதை கலைக்க உயர் நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்பதால் மனுதாரர் நீதிமன்றம் வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாட்ஸ் -அப் வீடியோ அழைப்பில் பேசியபோது அவர் கருவை கலைக்க விருப்பம் தெரிவித்தார். அவரது சம்மதத்தின் பேரிலேயே மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கருவை கலைப்பதால் சிறுமியின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, மனுதாரரின் மகளின் வயிற்றில் வளரும் 6 மாத கருவை கலைக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கின் விசாரணையை வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் விரைவில் முடித்து நீதிமன்றத்தில் 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும்
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.