வைகுந்தத்துக்கு சாலை அமைக்க கிருஷ்ண பரமாத்மாவின் அனுமதி பெறப்பட்டதா?


ஓபிஎஸ்

சென்னை கலைவாணர் அரங்கில், இன்று 2-வது நாளாகக் கூடிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கேள்விநேரம் முதல்முறையாக நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன், “சேலம் கோழிக்கால்நத்தம் - வடுகப்பட்டி - வைகுந்தம் சாலையை விரிவாக்கம் செய்திட அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேட்ட கேள்விக்கு, “ஒருவழிச் சாலைகளை இருவழிச்சாலையாக மாற்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது” என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் கூறினார்.

அடுத்து கேள்விகேட்க வாய்ப்பளிக்கப்பட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ், “வைகுந்தத்துக்கு சாலை அமைக்க கிருஷ்ண பரமாத்மாவின் அனுமதி பெறப்பட்டுவிட்டதா?” என்று புன்னகைத்தபடியே கேட்டார்.

“எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆன்மிகத்தில் திளைத்தவராவார். அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தினமும் காலை ஐந்தரை மணிக்கே வைகுந்தத்துக்கு வழி காட்டுகிறார். ஆன்மிக மக்கள் விரும்புவதை பார்த்துப் பார்த்துச் செயல்படுத்துகிறார்” என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் கூறியதும், அதுவரை இறுக்கமாக இருந்த பேரவை கொஞ்சம் நெகிழ்ந்தது.

x