ராஜேந்திர பாலாஜிக்கு ஜன.20 வரை நீதிமன்ற காவல்


ராஜேந்திர பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஜன.20-ம் தேதி வரை, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார்.

கடந்த 3 வார காலமாக 8 தனிப்படைப் போலீஸார் ராஜேந்திர பாலாஜியைத் தேடிவந்தனர். நேற்று மதியம்தான் ராஜேந்திர பாலாஜி காவல் துறையிடம் சிக்கினார்.

உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வர இருந்த நிலையில், கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் தமிழக காவல் துறையால் அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை விருதுநகர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரம்பீர் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, ‘கைது நடவடிக்கையை நிறுத்தினால் வெளியூர் செல்லாமல் விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம்’ என்று ராஜேந்திர பாலாஜி தரப்பு கேட்டுக்கொண்டது. அதை நிராகரித்து, ராஜேந்திர பாலாஜியை ஜன.20-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க, நீதிபதி பரம்பீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் அவரை மத்திய சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து, பணமோசடி புகார் தொடர்பாக இன்னும் பலகட்ட விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், இன்னும் ஓரிரு நாட்களில் ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க, தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

அத்துடன் இந்த 3 வார காலங்களில் ராஜேந்திர பாலாஜிக்கு உதவியவர்கள், அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் யார் என்ற பட்டியலும் தயார்செய்யப்பட்டு வருகிறது. இதில் முதல் நடவடிக்கையாக நேற்றே பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை காவல் துறை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x