தமிழகம் முழுதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஒமைக்ரான் பரவலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், “2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டோர், அறிகுறி இல்லாதோர், இணை நோய் இல்லாதோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானால், அவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம். 45 வயதுக்கு குறைவானோருக்கு லேசான அறிகுறி இருந்தாலும், வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். வீடுகளில் போதிய இட வசதி, காற்றோட்டம் இருக்க வேண்டும். கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேலானோர் கரோனா சிகிச்சை மையங்களில் சேரலாம்.
ஆக்ஸிஜன் அளவு 94-க்கும் கீழாகக் குறைதல், மூச்சுவிடுவதில் சிரமம், மார்பகப் பகுதிகளில் வலி ஏற்பட்டால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்” என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோல, அவர்களுக்கு மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவையில்லை, லேசான அறிகுறி உடையோருக்கு கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து 3 நாட்களுக்கு காய்ச்சல் இல்லையென்றால் அவர்கள் வீடு திரும்பலாம் என்றும் இவர்கள் வீடு திரும்பும் முன், மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒமைக்ரான் தொற்றுக்கு இடைக்கால சிகிச்சை மையங்கள் அமைப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களையும் மக்கள் நல்வாழ்வுத் துறை வௌியிட்டுள்ளது.