மீண்டும் ஒரு லாக்டவுனை சந்திக்க வியாபாரிகளிடம் சக்தியில்லை!


ஏ.எம்.விக்கிரமராஜா

தமிழக வணிகர்கள் இன்னொரு லாக்டவுனை சந்திக்க சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்க ஆலோசனை நடத்தப்படுகிறது. வணிக நிறுவனங்களையோ, கோயில்களையோ முழுமையாக மூடாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் செல்லும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

கடந்த கரோனா தொற்று காலத்தில் இருந்து மீண்டுவர முடியாத நிலையில் 40 சதவீத வணிகர்கள் உள்ளனர். மீண்டும் ஒரு ஊரடங்கை, லாக்டவுனை சந்திப்பதற்கு வியாபாரிகளிடம் சக்தியில்லை.

லாக்டவுன் இல்லாத கட்டுப்பாடுகளை முறைப்படுத்தி அரசு அறிவிக்க வேண்டும். வணிகர்களும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை மனதில் வைத்துக்கொண்டு முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும். அனைவரும் இரு தடுப்பூசிகளும் போட்டுக் கொள்ளவேண்டும். கரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வணிகர்கள் தயாராக உள்ளோம்.

பொங்கல் சீசன் என்பதால் கட்டுப்பாடுகளுடன் வணிக நிறுவனங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளி, செருப்பு என இரண்டுக்கும் 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை விதிக்கக் கூடாது என்பது தமிழ்நாடு வணிகர் சங்களின் நிலைப்பாடாகும்.

மாநில முதல்வர், நிதியமைச்சர் ஆகியோரின் அழுத்தம் காரணமாக ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரி வசூலிப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் செருப்புக்கும் வரி விலக்களிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம்” என்றார்.

x