ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்ததாக 4 பேர் கைது


ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாக இருக்க உதவியதாக, அவரது உறவினர் உட்பட 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த டிச.17 முதல் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல் துறை தெரிவித்ததுடன் அவரைப் பிடிக்க 8 தனிப்படைகளை அமைத்தது. இங்கே, அங்கே என போக்குக் காட்டிக் கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜி, கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் இருப்பதாக ஒரு தகவல் தனிப்படைக்குக் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினர் இன்று மதியம் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர்.

அவரிடம் முதற்கட்ட விசாரணையை நடத்திய பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருக்க உதவியதுடன் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக அவரது தங்கை மகன் கணேசன், விருதுநகர் மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு பாண்டியராஜன், பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், அவரது உறவினர் நாகேஷன் ஆகிய 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் தனக்கு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இருவர் உதவியதாக காவல் துறையிடம் ராஜேந்திர பாலாஜி வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் கைதுப் படலம் நீளும் என்றே தெரிகிறது.

x