தமிழக அரசின் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. வழக்கமாக மாநில அரசின் சாதனைகள், திட்டங்கள், புதிய அறிவிப்புகள் ஆகியவை இந்த உரையில் அதிகமிருக்கும். ஆனால் புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாநில அரசின் ஒட்டுமொத்த கவனமும், உழைப்பும் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக ஒரு சில துறைகளுக்கே விரயமாகி இருக்கும்போல. இதனால் பல்வேறு துறைகள் குறித்த தகவல்களில் காற்றாடியது.
அதிலும், செலவினங்கள், நலத்திட்டங்கள், அறிவிப்புகள் ஆகியவை குறித்த தகவல்களில், புள்ளிவிவரங்கள் வரிக்கு வரி நிறைந்திருக்கும். ஆனால் இந்த முறை ஆளுநர் உரையின் பெரும்பகுதி, இட்டு நிரப்பியதாகவே தென்பட்டது. உதாரணமாக, ’ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவு மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கான சலுகைகள் உயர்த்துதல், புதிய விடுதிகளுக்கு ஒப்புதல் அளித்தல், புதிய பயிற்சித் திட்டங்களைத் தொடங்குதல் போன்ற நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்துள்ளது’ என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன சலுகை, எத்தனை விடுதிகள் ஒப்புதல், புதிய பயிற்சித் திட்டங்கள் என்னென்ன என்பன குறித்த தகவல்கள் இல்லை. இதனால் இந்த சமூகங்களை சார்ந்தோர் தங்களுக்காக அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை முழுவதுமாக அறிந்துகொள்ளாமல் போயிருக்கிறது.
அதே போன்று, திராவிட இயக்கங்களின் தனிச் சிறப்பான சமூகநீதி மற்றும் சமூக நலன் சார்ந்த இடங்களில், திமுக ஆட்சிகளின் ஆளுநர் உரை தனித்துவமாக இருக்கும். ஆனால் இம்முறை அன்றாட செய்தித்தாள் வாசிப்புக்கு உரியவை கூட ஆளுநர் உரையில் சேர்ந்திருந்தது. உதாரணமாக, விளிம்பு நிலை மக்கள் மீதான முதல்வரின் தனிப்பட்ட அக்கறை என்பதன் கீழ், நரிக்குறவர், இருளர் குடும்பங்களின் இருப்பிடத்துக்கே சென்று அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றியதை சேர்த்துள்ளனர். அதனையொட்டி அம்மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த அறிவிப்போ, திட்டங்களோ சேர்ந்திருப்பின் அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பர்.
இந்த வரிசையில் சிறுபான்மையினருக்கான புனிதப் பயணம் குறித்த அறிவிப்பும் சேர்கிறது. ’தமிழ்நாட்டிலிருந்து ஹஜ், ஜெருசேலம் போன்ற புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு மானியத்தை அரசு தொடர்ந்து வழங்கும்’ என்பது மட்டுமே அறிவிப்பில் உள்ளது. நடைமுறையில் இருப்பதன் மேம்படுத்தல்களோ, புதிய அறிவிப்புகளோ இல்லை. குறிப்பாக பல்வேறு துறைகள் சார்ந்த திமுக தேர்தல் வாக்குறுதிகளை தொட்டுத் தொடரும் புதிய அறிவிப்புகள், இந்த உரையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அப்படி எதுவும் இடம்பெறவில்லை.
’சிறுபான்மையினரை கவலையடையச் செய்த குடியுரிமை திருத்தச் சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது’ என்பதை குறிப்பிட்டதுடன், ’அதனை நிறைவேற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்’ என்ற உறுதிமொழி மட்டுமே தரப்பட்டுள்ளது. அதே போன்று ’நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் தேவையற்றன என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம்’ என்பதும் தகவல் அளவிலேயே தரப்பட்டுள்ளன. அதன்பொருட்டான இதுவரையிலான நகர்வுகளோ, எதிர்கால நடவடிக்கைகளுக்கான நம்பிக்கையூட்டும் தகவல்களோ இல்லை.
இப்படி அதிருப்தி அடையச் செய்ததன் வரிசையில் ஆறுதலுக்கும் இடமுண்டு. எஸ்சி எஸ்டி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றியது குறித்த அறிவிப்பு அதில் சேரும். ’பட்டியலின, பழங்குடி மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தன்னாட்சி அதிகாரங்களுடன், சட்டப்படி அமைக்கப்பெற்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தை அரசு உருவாகியததையும் அதன் மூலம் அவர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டதையும்’ ஆளுநர் உரை பெருமிதத்தோடு பதிவு செய்தது.
மேலும், ’மருத்துவ பட்டப் படிப்புகளில், அகில இந்திய அளவிலான இட ஒதுக்கீட்டில் இதர பிறபடுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு சாத்தியமானது குறித்த பதிவு இடம்பெற்றது. இந்த வரிசையில் அனைத்து தொழில் படிப்புகளிலும் அகில இந்திய அளவில் ஓபிசிக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்ற உறுதிமொழியும்’ வழங்கப்பட்டது. இதே பாங்கில் ஆளுநர் உரையின் பெரும்பகுதி இடம்பெற்றிருப்பின் மக்களின் வரவேற்பு ஏகோபித்திருக்கும். தற்போதைய தமிழக அரசுக்கு அதற்கான அவகாசம் தாராளமாக இருக்கிறது. காத்திருப்போம்.