வரலாற்றில் இன்று... மறக்கமுடியாத சுசீந்திரம் துப்பாக்கிச்சூடு


சுசீந்திரம் கோயில்

சிவன், பிரம்மன், விஷ்ணு என மும்மூர்த்திகளும் ஒருசேர காட்சிதரும் ஆலயம், இந்திரனின் பாவம் போக்கிய தலம், பிரமாண்டமான ஆஞ்சநேயர் என சுசீந்திரம் கோயிலின் ஆன்மிக முக்கியத்துவம் பலருக்கும் தெரியும். அந்த சுசீந்திரம் ஆலயத்துக்கும், சுதந்திர போராட்டத்துக்கும் கூட முக்கியத் தொடர்பு இருந்தது. சுசீந்திரத்தில் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக தேரில் மூவர்ணக்கொடி கட்டப்பட்ட வரலாறும் உண்டு. அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் துடிதுடிக்க பலியானார்கள். அது நடந்ததும் இன்றுபோல் ஒரு ஜனவரி 5-ம் தேதிதான்!

இதுகுறித்து நம்மிடம் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் என்.டி.தினகர் விரிவாகவே பேசினார். ’‘குமரி மாவட்டப் பகுதிகள் அன்றைய காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராட்சிக்கு உட்பட்டு இருத்தன. திருவாங்கூரில் திவான் அதிகாரத்தை ஒழித்துவிட்டு மக்களாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கம் போராடி வந்தது. திருவாங்கூர் தமிழர்களின் உரிமைகளுக்காக திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் எனும் அரசியல் இயக்கம் குரல் கொடுத்து வந்தது. இவ்விரு இயக்கங்களும் இந்திய தேசிய காங்கிரசோடு தொடர்பு கொண்டிருந்தன. தேசிய காங்கிரசின் மூவர்ணக் கொடியை இவ்விரு இயக்கத்தினரும் பயன்படுத்தி வந்தனர்.

காங்கிரஸ் கொடியை ஏற்றுவதற்கு திருவாங்கூர் போலீஸார் பல இடங்களில் தடை விதித்து வந்தனர். கீரிப்பாறை மலைப் பகுதியில் பெருந்தோட்ட முதலாளியாக இருந்த ஆங்கிலோ இந்தியரான சிம்சன் துரை, தனது அடியாட்களுடன் சென்று விடுதலை இயக்கத்தவரை மிரட்டுவதையும், காங்கிரஸ் கொடியை கிழிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். எனவே, தென் திருவிதாங்கூரில் காங்கிரஸ் கொடியை ஏற்றுவதே ஒரு சுதந்திர போராட்ட வழிமுறையாக அப்போது மாறியிருந்தது.

1947, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சுசீந்தரம் கோயிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் கோவிலுக்கு முன்புள்ள சாலையில் ஒரு கொடிக் கம்பம் நட்டு, மூவர்ண கொடியை ஏற்றுவதற்கு அப்பகுதி காந்தி வாலிபர் சங்க இளைஞர்கள் முயற்சித்தனர். ஆனால் கொடியேற்றுவதை போலீஸார் தடுத்து விட்டதால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் மறுநாள் நடைபெறவிருக்கும் தேரோட்ட விழாவின்போது தேரின் உச்சியில் கொடியை பறக்கவிட திட்டமிட்டனர்.

சுசீந்திரம் ஆலயத்தின் கோபுரம்

1947, ஜனவரி 5 அன்று நடைபெற்ற தேரோட்ட விழாவின்போது இளைஞர்கள் தேரின் மீது கொடியைக் கட்ட முயன்றதால் தேரோட்டம் தடைப்பட்டது. ‘திவான் சி.பி.ராமசாமி ஐயர் ஒழிக’, ‘சிம்சன் துரையைக் கைது செய்’, ‘கொடியைத் தேரில் கட்டியேத் தீருவோம்’ என்று பல கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இளைஞர் ஒருவர் தேரின் மேல் ஏறி கொடியைக் கட்டிவிட்டதால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. கொடியை அகற்றினால் மட்டுமே தேரோட்டத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்று கூறியது கோயில் நிர்வாகம்.

தகவல் அறிந்ததும் சமஸ்தான காங்கிரஸ், திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வட்டாரத் தலைவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வை எட்டமுயன்றனர். ஆனால் இளைஞர்கள் கொடியை அகற்ற மறுத்ததை அடுத்து, காவலர்கள் தடியடி பிரயோகம் நடத்தினர். இரு தரப்பினருக்குமிடையே மோதல் எழுந்ததையடுத்து காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். அருணாச்சலம், பச்சைய்யா நாடார், உமாதாணுப் பிள்ளை, திரவியம் பிள்ளை ஆகியோர் கொல்லப்பட்டதாக காவல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சி. பி. இளங்கோ, எஸ்.சிவன்பிள்ளை உள்ளிட்ட 61 நபர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேரில் கொடியேற்றப்பட்ட சம்பவம் சமஸ்தான காங்கிரஸ் கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல என்றும், தேசியக் கொடிகளை அகற்றும் சிம்சன் துரையின் அடாவடித்தனத்துக்கு எதிரான வாலிபர்களின் எழுச்சி என்றும் காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவரான எஸ். சிவன் பிள்ளை தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இப்போது வரலாற்றில் சுசீந்திரம் ஆன்மிக தலமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அது, சுதந்திர வேள்விக்கும் சுடராக இருந்த பகுதி. நாட்டு விடுதலைக்காகப் போராடி உயிர்நீத்த நால்வரின் நினைவாக சுசீந்திரம் பகுதியில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட வேண்டும்’’ என்றார் அவர்.

x