‘கந்து வட்டி கும்பலை ஒழிக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்’ - வேல்முருகன் வலியுறுத்தல்


தி.வேல்முருகன்

சென்னை: தமிழகத்தில் கந்துவட்டி கும்பலை ஒழிக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தமிழக அரசினை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கந்து வட்டி கொடுமையால், கடந்த 15 நாட்களில் 7 பேர் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சிவகாசியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பட்டாசு தொழிலே பிரதானமாக இருந்து வருகிறது. இதுதவிர வேறு எந்த தொழிலும் இவர்களுக்கு கிடையாது. இந்நிலையில் பட்டாசு ஆலைகளை 4 மாத காலமாக அரசு அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.

இதனால் தற்சமயம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தினால் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்காரர்கள் யாரும் ஜூன்.5 முதல் ஜூலை 5-ம்தேதி வரை கடன் வசூலிக்க வர வேண்டாம் என அக்கிராம பொதுமக்களே அறிவிப்பு பலகை வைக்கும் நிலை நிலவி வருகிறது.

குறிப்பிட்ட தேதிக்குள் பணத்தை ஒப்படைக்காதவர்களுக்கு சுய உதவிக் குழுக்காரர்கள் நெருக்கடி கொடுப்பதும், இரவு முழுவதும் அவர்கள் வீட்டுக்கு முன் அமர்ந்து கொள்வது, தகாத வார்த்தைகளில் பேசுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற காரணங்களால் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி அதை ஈடுகட்ட வேண்டிய அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

அந்தவகையில் கடந்த 4 மாதமாக வேலை இல்லாமல் வார வட்டி, மாத வட்டி, மகளிர் சுய உதவிக் குழு கடன் மற்றும் கந்து வட்டி கட்டுவதற்கு கையில் பணம் இல்லாமல், மீனம்பட்டி மக்கள் தவித்து வருகின்றனர். இவ்வாறு அத்துமீறும் கந்து வட்டி கும்பல் மற்றும் குழுக்காரர்கள் கொடுக்கும் நெருக்கடி, கொலை மிரட்டல்களை தாங்க முடியாமல் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கின்றன.

இந்த செயல்களுக்கு சில பட்டாசு ஆலை முதலாளிகளும், அரசு அதிகாரிகள் சிலரும் துணை போவதாகவும் கூறப்படுகிறது. எனவே, கந்து வட்டி கும்பலை ஒழிக்க தமிழக அரசு கண்காணிப்பு குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.