உப்புச் சப்பற்ற ஆளுநர் உரை - பி.ஆர்.பாண்டியன்!


சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரை விவசாயிகளுக்கு மட்டுமல்ல யாருக்குமே பயனளிக்காத உப்புச் சப்பற்ற உரை என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டிற்கான அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆளுநர் உரையில் இடம் பெறுவது வழக்கம். அப்படி இந்த ஆண்டும் பல்வேறு அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இருக்கும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படி குறிப்பிடும்படியான அறிவிப்புகள் ஏதும் இதில் இல்லாதது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

பி.ஆர்.பாண்டியன்

தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர் பாண்டியன் இது குறித்து நம்மிடம் பேசுகையில், ’’தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இது உப்புச் சப்பற்ற உரை. இதில் உப்பு, உரைப்பு, புளிப்பு கசப்பு மட்டுமல்ல... இனிப்பும் இல்லை. ஆளுநர் உரையின் போது அரசின் திட்டங்கள் அறிவிப்புகளாக அறிவிக்கப்படுவது வழக்கம். அதேபோல மத்திய அரசினுடைய குறைகள் சுட்டிக் காட்டப்படுவதும் வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியிலும்கூட அப்படி நடந்திருக்கிறது. நான் நிதிக்காக மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறேன் என்று முதல்வர் சொன்னபோது நாங்கள் வேதனைப்பட்டோம். அந்த நிலையை ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டி மத்திய அரசிடமிருந்து போதுமான நிதியைக் கோரியிருக்க வேண்டும். ஆனால் அதற்கான அழுத்தமான வலியுறுத்தல்கள் ஆளுநர் உரையில் இல்லை.

அதேபோல, விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புக்களும் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நெல்லுக்கு 2,500 ரூபாய் விலை தருவோம் என்று சொல்லி இருந்தார்கள். அது இந்த ஆளுநர் உரையின் போது அறிவிக்கப்படும் என்று காத்திருந்தோம். ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் இல்லை. அதுபோல, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம், இழப்பீடு வழங்கும் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. நிவாரணம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

பொதுமக்களுக்கும் பலனிக்கும் எந்த அறிவிப்புக்களும் ஆளுநர் உரையில் இல்லை. மொத்தத்தில் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, யாருக்குமே பலனில்லாத சம்பிரதாய உரையாக அமைந்திருக்கிறது. பாம்பும் சாகக்கூடாது, தடியும் நோகக்கூடாது என்கிற விதமான தமிழக அரசின் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவாக உணர்த்தியிருக்கிறது ஆளுநர் உரை” என்று சொன்னார்.

x