“பதவியேற்ற முதல் நொடியிலிருந்தே...” - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு!


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பதவியேற்ற முதல் நொடியிலிருந்தே கரோனா பெருந்தொற்றுப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சிறப்பாக மேற்கொண்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழகத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்கியிருக்கிறது.

இதில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசின் பல்வேறு பணிகளைப் பாராட்டினார். குறிப்பாக, கரோனா பெருந்தொற்றைத் தமிழக அரசு கையாண்ட விதம் குறித்து அவர் பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டார்.

“பதவியேற்ற முதல் நொடியிலிருந்தே ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கிவிட்டு, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி ஆக்சிஜனும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் மாநிலமெங்கும் கிடைப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிசெய்தார். தடுப்பூசிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி கோவிட் 19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையைத் திறம்பட கையாண்டார்” என்று ஆர்.என்.ரவி பாராட்டினார்.

மேலும், “மாநிலத்தின் பொருளாதாரமும் மக்கள் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படாமல் கொரோனா பெருந்தொற்றை இந்த அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய முறை இந்த நாட்டுக்கே முன்னோடியாக அமைந்தது. கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும், மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கான பல சிறப்பு முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் வாரம்தோறும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலின் முதல்வரான பின்னர் தடுப்பூசிகளின் தட்டுப்பாட்டைக் குறைக்க எடுத்த முன்முயற்சிகளையும் ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார். திமுக அரசு பொறுப்பேற்றிருந்த சமயத்தில், 8.09 சதவீதத்தினருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2.84 சதவீதத்தினருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் மட்டுமே செலுத்தப்பட்டிருந்ததாகவும் கூறிய அவர், ஏழே மாதங்களில் 86.95 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி, 60.71 சதவீதத்தினருக்கு இண்டாம் தவணை தடுப்பூசி என 8.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படுவது, முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுவது ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

ஒமைக்ரான் பரவிவரும் சூழலில், கரோனா இரண்டாம் அலையின் அனுபவத்தில், நாட்டுக்கே எடுத்துக்காட்டாக மரபணு வரிசை முறை பரிசோதனை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தியிருப்பதாகவும், ஆர்டிபிசிஆர் சோதனை வசதிகளை அதிகரித்திருப்பதாகவும் கூறிய அவர், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பிஎஸ்ஏ ஆலைகளை நிறுவுதல், அவசர சிகிச்சைப் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துவருவதாகத் தமிழக அரசைப் பாராட்டினார்.

பெருந்தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாயும்; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், கரோனா தொற்றால் உயிரிழந்த அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 50,000 ரூபாய் வழங்கப்படுவதைப் பாராட்டினார்.

முதல்வ்ர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, பல்வேறு தரப்புகளிலிருந்து 543 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டது என்றும், இந்நிதியிலிருந்து கோவிட் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு 54,164 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

கோவிட் தொற்றுக்குள்ளானோர், தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாகப் பெறலாம் என தமிழக அரசு அறிவித்ததாகக் குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இதன் பயனாக இதுவரை 33,117 பேர் 387 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர் எனக் கூறினார்.

x