பேரவை நேரலை: திமுகவின் கருத்துரிமை பயணத்தில் புதிய மைல்கல் !


மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டப் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. திமுகவும்கூட கடந்த தேர்தல் அறிக்கையில் பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என அறிவித்திருந்தது. இதோ இன்று, பேரவை நிகழ்வுகளை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை நேரலையும் செய்துவிட்டது.

இது, கருத்துரிமையின் மீதான திமுகவின் சரித்திர சாதனை. மக்கள் பிரதிநிதிகள் பேரவையில் தங்கள் பிரச்சினைகளுக்காக எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை வெட்டி, ஒட்டப்படாத நேரடிக் காட்சிகளின் ஊடே மக்கள் பார்த்து அறிந்துகொள்ளும் வாய்ப்பும், அவர்களின் பணிகளை மதிப்பீடு செய்துகொள்ளும் வாய்ப்பும் இதனால் எழும் என நம்பப்படுகிறது.

பாராளுமன்றத்தில் நேரலை நிகழ்வு நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது. 1984 -ம் ஆண்டு முதலே பாராளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவையின் கேள்வி நேரம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. 2006 ம் ஆண்டு மக்களவை நேரலைக்கு தனி தொலைக்காட்சியும், 2011 -ம் ஆண்டு மாநிலங்களவை நேரலைக்கு தனி தொலைக் காட்சியும் தொடங்கப்பட்டது. அதேபோல் தமிழக சட்டசபை நிகழ்வுகளையும் நேரலை செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்தக் கோரிக்கையை ஓங்கி ஒலித்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவந்த விஜயகாந்த், அரசுக்கு அதில் நிதி நெருக்கடி இருந்தால் தனது கேப்டன் தொலைக் காட்சியில் இலவசமாகவே நேரலை செய்து தருவதாக அறிவித்தார். இதுதொடர்பில் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என உத்தரவிடக்கோரி வழக்கும் தொடர்ந்தார் விஜயகாந்த். இப்போது பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேரத்தில் தேமுதிகவுக்கு பேரவையில் பிரதிநிதித்துவமே இல்லாமல் இருப்பது தனிக்கதை!

சட்டசபைக் கூட்டத் தொடர் தொடக்கம்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பேரவை நேரலையைத் துவங்கியதன் பின்னால் அக்கட்சியின் சுய அனுபவப் பாடமும் இருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டின் பேரவைக் காட்சிகளை அத்தனை எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்த அந்த நாளில், அவைக்காவலர்கள் தன்னை இழுத்துத்தள்ளி சட்டையைக் கிழித்ததாக குற்றம் சாட்டினார் மு.க.ஸ்டாலின். அப்போதே பேரவையில் நேரலை வசதி இருந்தால் மக்கள் அங்கு என்ன நடந்தது என அறிந்திருப்பார்கள் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததுமே பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளுமே படிப்படியாக துவங்கின. அந்த வகையில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் யூடியூப் சேனல் மூலம் ஆளுநர் உரையும் சபாநாயகரின் தமிழாக்க உரையும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

இதுகுறித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் ஆர்வலர் பத்மநாபன் கூறும்போது, “ஆளுநர் உரை நேரலையில் வந்தது ஒரு தொடக்கம் தான். இதை இத்தோடு நிறுத்திவிடாமல் பேரவையின் முழு நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை செய்வார்கள் என நம்புகிறேன்” என்றார்.

x