ஆட்சிக்கு வரத்தானே பொங்கல் பரிசுப் பணம் கொடுத்தீர்கள்!


அமைச்சர் தங்கம் தென்னரசு

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், முதன்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்த்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டது.

தொடர்ந்து, ஆளுநர் உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கரோனா 2-வது அலையை சமாளித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டினார்.

இதைக்கேட்ட உடனே கரோனா காலத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என கூறி, ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்த அதிமுகவினர், செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் இந்த ஆட்சியைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிய ஈபிஎஸ் முக்கியமாக, “பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.2,500 வழங்கியது அம்மா அரசு; இப்போது பொங்கல் பரிசு அளிக்காதது மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

அதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்கிச் செல்லும் பெண்களும், முதியோரும் அங்கே வந்து தொகுப்புகளை வழங்கும் திமுகவினரிடம் வாக்குவாதம் செய்வதை குறிப்பிட்டார்.

பேரவைக் கூட்டத் தொடரின் இடைவேளையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, “நீங்கள் எதற்காகப் பொங்கல் பரிசுப் பணம் கொடுத்தீர்கள். ஆட்சியில் இருந்த அத்தனை ஆண்டுமா கொடுத்தீர்கள்? அடுத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்றுதானே போன ஆண்டு கொடுத்தீர்கள். ஆனால் இந்த அரசு அப்படி அல்ல. தரமான பொருட்களை பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுத்திருக்கிறது. மேலும் மக்களுக்கான நல்லரசாகச் செயல்படுகிறது” என்று பதில் கொடுத்திருக்கிறார்.

x