ஆளுநர் உரை: பள்ளி - கல்லூரிக் கல்வி அறிவிப்புகள் என்னென்ன?


தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர்பான அறிவிப்புகள் வருமாறு:

அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல இயலாததால், ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் கற்றல் இழப்புகளை சரிசெய்வதற்காக இல்லம் தேடிக் கல்வி என்ற முன்னோடித் திட்டம் சுமார் 200 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

மக்களின் பங்களிப்புடன் முன்மாதிரியாக 12 மாவட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் இத்திட்டம், தற்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 80 ஆயிரத்து 138 இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 80 ஆயிரம் அலுவலர்களைப் பயன்படுத்தி ஜிபிஎஸ் செயலி வாயிலாக முறையாக கணக்கெடுத்து 1,73,792 குழந்தைகள் அவர்களின் வயதுக்கேற்ற வகுப்புகளில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தாய்மொழிப் பற்றும், உலகை வெல்ல உதவும் ஆங்கிலமும் இணைந்த இருமொழிக் கொள்கையுடன், சமூகநீதி, அறிவியல் அடிப்படையில் பாடத்திட்டங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் திறன்மிகு வகுப்பறைகளும், உயர்ந்துவரும் மாணவர் சேர்க்கைக்கு ஏற்ப புதிய கட்டிடங்கள், 6,992 நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், பிராட் பேண்ட் வசதி, நல்ல வசதியுடன் கூடிய சுகாதார வளாகங்கள் உருவாக்கப்படும்.

நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிகளும் மாணவர் களுக்கான மென்திறன் வளர்ப்பு பயிற்சிகளும் வழங்கப்படும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளின் தரத்தை உயர்த்த இந்த அரசு முனைந்துள்ளது. கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் பயனடையும் வகையில் உயர்தர கல்வி தொழில்நுட்பத் தளங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில், வல்லுனர்களைக் கலந்தாலோசித்து பாடத்திட்டத்தை மறு சீரமைக்கவும் அரசு முயற்சி செய்து வருகிறது.

தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் பாடத்திட்டத்தையும், ஆய்வக வசதிகளையும் மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்னுரிமை அடிப்படையில் 7.5 ஒதுக்கீட்டில் பொறியியல் போன்ற தொழில் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கடணம், கலந்தாய்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் அரசே ஏற்கே முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 8,371 மாணவர்கள் இதுவரையில் பயனடைந்துள்ளனர். இவ்வாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த 181 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x