தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையைப் புறக்கணித்து, திமுக கூட்டணியில் இருக்கும் விசிக வெளிநடப்பு செய்தது. இதேபோல் அதிமுகவும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
ஆளுநர் தன் உரையைத் தொடங்கியதுமே விசிக எம்எல்ஏ-க்களான ஆளுர் ஷாநவாஸ் உள்ளிட்ட அக்கட்சியின் 4 எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அவைக்கு வெளியே அவர்கள் கூறும்போது, “அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக நிறைவேற்றிய நீட் ரத்து குறித்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டப்பேரவையை ஆளுநர் சிறுமைப்படுத்தி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசையும், அதைத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் ஆளுநர் அவமதித்துள்ளார். அதனால் சபையில் இருந்து வெளியேறினோம்“ என்றனர்
இதேபோல், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிட்டது, அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்குவதோடு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டி அதிமுகவும் வெளிநடப்பு செய்தது.