நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடப்பு முன்பதிவு வசதி இல்லாததால் ரயில் வசதியும், அதில் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தும் அவசரநேரத்தில் பயணிகள் பயன்படுத்தமுடியாத சூழல் நிலவுகிறது. இந்தக் குறையை நிவர்த்தி செய்யவேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல், அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த வசதியை அறிமுகம் செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம் காமதேனுவிடம் கூறும்போது, “கரோனா காலக்கட்டத்தில் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளில் அதிக அளவு கூட்டம் இருப்பதால், கரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு வழிவகுத்துவிடும் அபாயம் இருப்பதாக பல ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் தூக்கப்பட்டன. இரவுநேரப் பயணத்தில் பெரும்பாலும் முன்பதிவு செய்து, படுக்கை வசதியுடனே மக்கள் பயணிக்க விரும்புகின்றனர். ஆனால், பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் அப்படியானது அல்ல. அதில் அவசரம் கருதி பலரும் திடீரென பயணத்திட்டமிடலை வகுப்பார்கள். கரோனா காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும்வகையில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை பகல்நேர ரயில்களில் நீக்கிவிட்டார்கள். இதனால் எளிய மக்கள் குறைவான கட்டணத்தில் பயணம் செய்வதற்கு முடியாமல் தவித்துவருகின்றனர்.
திருவனந்தபுரம்-திருச்சி பகல்நேர இண்டர்சிட்டி ரயிலிலும் இந்தப் பிரச்சினை இருந்தது. நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்தில் இந்த ரயிலுக்கான நடப்பு முன்பதிவு மையம் அமைக்கப்பட்டது.
இப்போது அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அந்த முன்பதிவு மையம் ரத்தானது. அதேநேரம் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பகல்நேரத்தில் சென்னை செல்ல வசதியாக குருவாயூர்_சென்னை விரைவு ரயில் உள்ளது. இந்த ரயில் காலை 7.20 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு பகல்நேரத்தில் தென் மாவட்டங்களை தலைநகர் சென்னையோடு இணைக்கும் ரயிலாக உள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு செய்யாதவர்கள் பயணிக்க முடியாத சூழல் உள்ளது. இந்த ரயிலுக்கும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடப்பு முன்பதிவு வசதி அமைத்தால், அவசர பயணமாகச் செல்வோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இதேபோல் தென்மாவட்டங்களில் பகல்நேரங்களில் இயக்கப்படும் பல ரயில்களிலும் முன்பதிவு செய்யாத பயணிகள் இதேபோல் ‘நடப்பு முன்பதிவு’ மையம், அனைத்து ரயில் நிலையங்களில் அமையும்பட்சத்தில் அவர்கள் பயணத்தை முன்பதிவு செய்து பயணிக்க முடியும். இப்போது தமிழகத்தில் சில ரயில் நிலையங்களிலேயே இந்த வசதி உள்ளது. இது அனைத்து ரயில் நிலையங்களிலும் அமையும்பட்சத்தில், அவசரநேர பயணர்களுக்கு சமூக இடைவெளியுடன் கூடிய பாதுகாப்பான பயணமாகவும் அது இருக்கும்’’ என்றார்.