பொங்கல் முதல் போர்வையோடு புறப்படுகிறோம் -பாஜக அண்ணாமலை


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“கால்கள் தேய்ந்தாலும் பரவாயில்லை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை செல்வோம். போர்வையோடு புறப்படுகிறோம்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 97-வது பிறந்தநாள் விழாவை, பாஜகவினர் நல்லாட்சி தினமாகக் கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

“தமிழகத்தில் 1 மெகா வாட் சோலார் யூனிட் போட வேண்டும் என்றால் 20 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. இங்குள்ளவர்கள் கல்லா கட்டும் வேலையைத்தான் முக்கியமாகச் செய்கின்றனர்.

வரும் 13, 14-ம் தேதி மதுரையில் தங்கப் போகிறோம். இதேபோல தமிழகம் முழுதும் உள்ள கிராமங்களில் பாஜகவினர் தங்கி அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். கால்கள் தேய்ந்தாலும் பரவாயில்லை, போர்வையுடன் புறப்படுகிறோம். கிராமம் கிராமமாகச் செல்லப் போகிறோம்” என்று பேசினார்.

போகிக்கும் பொங்கலுக்கும் மதுரையில் தங்கியிருந்து ‘மோடி பொங்கல்’ கொண்டாடிய பிறகு, தமிழக கிராமங்களுக்கு நடந்தே செல்ல இருக்கும் அண்ணாமலை, மத்திய அரசு தமிழகத்துக்கு இதுவரை அளித்துள்ள திட்டங்கள் குறித்த பட்டியலை கையில் எடுத்துச்செல்ல இருக்கிறாராம். குளிருக்குப் பாதுகாப்பாக போர்வையோடு செல்லும் இவர், ‘மாநில அரசின் செயல்திட்டங்களில் எத்தனை மத்திய அரசின் திட்டங்கள் என்பதை மக்களிடம் எடுத்துச்சொல்லி, தமிழக மக்களின் கவனத்தை பாஜகவின் பக்கம் திருப்பிக் காட்டுகிறேன்’ என்றும் சொல்லியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

x