அவினாசி மசூதி விரிவாக்கத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை


சென்னை உயர் நீதிமன்றம்

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் மசூதி விரிவாக்கம் செய்யும் பணிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், இந்து முன்னேற்ற அமைப்பின் தலைவராக உள்ள கோபிநாத், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில், ‘திரூப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகாவில் உள்ள மங்களம் சாலையில் காவல் குடியிருப்புக்காக நில வருவாய் அதிகாரி கடந்த 2001-ம் ஆண்டு 85.1 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், இதில் 4.5 செண்ட் நிலம் சாலைக்காகவும், 18.6 செண்ட் நிலம் மசூதிக்காக ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மசூதி அருகே 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இருப்பதாகவும், தற்போது இந்த மசூதியை விரிவாக்கம் செய்யும் பணியை சட்டவிரோதமாக நில ஆக்கிரமிப்பு செய்து பணிகள் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மசூதி விரிவாக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மசூதி விரிவாக்கப் பணிக்கு இடைக்கால தடை விதித்தும், மனுதாரரின் மனு மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 3 வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜன.31-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

x