திருப்பூர் ரயில் நிலையம் அருகே கருணாநிதி சிலைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டம் கைனூர் கிராமத்தில் அம்பேத்கர் சிலை வைப்பது தொடர்பான பிரச்சினையில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றினை, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபரில் விசாரித்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பொது இடங்களில் முறையான அனுமதி பெறப்படாது வைக்கப்பட்ட சிலைகளை அகற்றுமாறும், அனுமதியுடன் கூடிய சிலைகளை பூங்கா அமைத்து பராமரிக்கும்படியும் உத்தரவிட்டார்.
இதன் பின்னணியில், திருப்பூரைச் சேர்ந்த திருமுருக தினேஷ் என்பவர் அண்மையில் நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் ’திருப்பூர் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் அருகே விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதியில், திமுகவின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் சிலை வைக்க திட்டமிடப்படுவதாகவும், இது நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது’ எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த கடிதத்தை ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த வழக்குடன் இணைத்து விசாரணைக்கு எடுத்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அரசு தரப்புக்கு சில கேள்விகளை எழுப்பியிருந்தார். நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக பொதுஇடத்தில் சிலை வைக்க யாரும் முடிவெடுத்துள்ளார்களா, சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதா’ என தமிழக உள்துறை செயலாளர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று(ஜன.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது. ’மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரிய, திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ க.செல்வராஜின் விண்ணப்பத்தை, உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றி கடந்த செப்.15 அன்றே மாவட்ட ஆட்சியர் நிராகரித்துவிட்டதாக’ அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அது தொடர்பான மாவட்ட ஆட்சியரின் கடிதமும் தாக்கல் செய்யப்பட்டது.
இவற்றை பதிவு செய்த நீதிபதி, ’வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை’ எனக் கூறி வழக்கை முடித்துவைத்தார்.