மருத்துவமனை வாசலில் மலர்ந்த மனிதம்


சிவகாமியும், கூடாரமும்

சாலையோரத்தில் கிடந்த நாய்க்குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் வகையில், தன் வீட்டுடன் கூடிய மருத்துவமனையின் முன்பகுதியில் கூண்டு அமைத்ததோடு, நாய்க்குட்டிகளுக்கு நேரத்துக்கு உணவு கொடுத்தும் பராமரித்து வருகிறார் சிவகாமி என்னும் மூதாட்டி.

நாய்க்குட்டிகளைப் பார்த்துச் செல்லும் குழந்தைகள்

திருநெல்வேலி டவுண் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெருவில் நாம் கண்ட காட்சிதான் இது. ஸ்ரீநிவாஸ் ஹாகேஷ் பல் மருத்துவமனையின் வாசல் பகுதி அது. சாலையோரத்தில் கிடந்த நாய்க்குட்டிகளுக்காக கூண்டு அமைத்து, அதில் இருந்து நாய்க்குட்டிகள் வெளியேறிவிடாமல் அடிக்கடி கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வந்தார் சிவகாமி. அவரிடம் பேசினோம்.

‘‘தெருநாய் ஒன்னு, இந்தப்பகுதியில் 5 குட்டிகள் போட்டிருந்தது. தாய் நாய் நேரத்துக்கு வந்து பால் கொடுத்துவிட்டுச் சென்றுவிடும். அதன் முழுக்கவனமும் இரைதேடலை மையப்படுத்தியே இருக்கும். அது நல்ல உணவு கிடைத்து சாப்பிட்டால்தான் குட்டிகளுக்குப் பால் கொடுக்க முடியும்.

அதேநேரத்தில், இப்படி தாய் நாய்களால் விடப்பட்டிருக்கும் குட்டிகள் தத்தி, தத்தி நடந்து சாலைக்கு வந்துவிடுகின்றன. சாதாரணமாக சைக்கிளில் அடிபட்டால்கூட இந்தக் குட்டிகள் இறந்துவிடும். இதற்கு முன்பு எங்கள் தெருவிலேயே அப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதனால் தான் குட்டிகளை தூக்கிவந்து, இப்படி ஒரு கூடாரம் அமைத்து அதில் வைத்துப் பராமரிக்கிறேன். ஒருவாரத்தை கடத்திவிட்டால் அந்த குட்டிகள் தன்னிச்சையாகப் பிழைத்துக்கொள்ளும்.

இது அடிக்கடி ஆட்டோ, பைக் என சென்று கொண்டே இருக்கும் சாலை. அதனால்தான் குட்டிகளுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என இப்படி பராமரிக்கிறேன். வீட்டிலும் அரைலிட்டர் பால் கவர் கூடுதலாக வாங்குகிறேன். அது இந்த நாய்க்குட்டிகளுக்காக... என் மருமகனின் மருத்துவமனையுடன் கூடிய வீடு இது. மருமகன் ராகவனும் இதுக்கு அனுமதிச்சாங்க. என் பேரன்கூட ஹைகிரவுண்ட் அரசு மருத்துவக் கல்லூரியில்தான் படிக்கிறான்” என்று நம்மிடம் பேசிக்கொண்டே நாய்க்குட்டிகளின் மீதும் ஒரு கண் வைத்துக் கொள்கிறார்.

சிவகாமி பாட்டியின் இந்தக் கருணையுள்ளம் அனைவருக்கும் வாய்த்துவிட்டால், ஜீவராசிகளும் எப்போதும் சுகமே!

x