புதுக்கோட்டை நார்த்தாமலை அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த, போலீஸாரின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்த சிறுவன் புகழேந்தியின் உடல் பிரேதபரிசோதனைக்குப் பின், அவனது பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில், தமிழகக் காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயற்சி தளம் உள்ளது. இங்கு கடந்த டிச. 30-ம் தேதி மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் மற்றும் தமிழகப் போலீஸார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயிற்சியில் சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில், தனது தாத்தா முத்துவின் வீட்டில் உணவருந்திக்கொண்டிருந்த சிறுவன் புகழேந்தியின் தலையில் பாய்ந்தது.
11 வயதான சிறுவன் புகழேந்தி, கொத்தமங்கலப்பட்டி என்ற ஊரைச்சேர்ந்த கூலித் தொழிலாளி கலைச்செல்வன் – பழனியம்மாள் தம்பதியின் மகனாவான். பசுமலைப்பட்டியில் உள்ள தாத்தாவின் வீட்டுக்கு வந்திருந்தபோதுதான் இந்த அசம்பாவிதம் நடந்தது. தலையில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் இருந்த புகழேந்திக்கு, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அங்கு அவனது தலையில் இருந்த குண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன்றி நேற்று(ஜன.3) புகழேந்தி உயிரிழந்தான். சிறுவனின் உறவினர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக, துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீஸார் மீது கீரனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சிறுவன் சிகிச்சைபெற்றுவந்த சிறுவன் உயிரிழந்ததையடுத்து, கொத்தமங்கலப்பட்டி மற்றும் நார்த்தாமலை ஆகிய 2 இடங்களில் புகழேந்தியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
புகழேந்தியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் அவனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை ஏற்றுக்கொண்டு சிறுவனின் உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதித்தனர். அதையடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனின் உடல் பிரேத பிசோதனை செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்கு முன்னதாக முழு உடலையும் மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர்.
பிரேதப் பரிசோதனை முடிந்து மதியம் 1.30 மணி அளவில் புகழேந்தியின் உடல் அவனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை சொந்த ஊரான கொத்தமங்கலப்பட்டிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு இறுதிச்சடங்குகளுக்குப் பிறகு அவனது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. மருத்துவமனை வளாகம் தொடங்கி சிறுவனின் ஊர்வரைக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
மீண்டும் இதுபோலொரு சம்பவம் நடக்காமலிருக்க, துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை உடனே மூட வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடையோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அத்துடன் புகழேந்தி குடும்பத்துக்கு அரசு வேலையும், அரசு சார்பில் வீடு கட்டித்தரவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.