சட்டப்பேரவை கூடும் நிலையில், திமுக எம்எல்ஏவுக்கு கரோனா!


பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜன.5 அன்று கூட உள்ள நிலையில், பெரம்பலூர் தொகுதி திமுக எம்எல்ஏ ம.பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறவிருந்த சட்டப்பேரவை கூட்டம், கரோனா தடுப்பு நடைமுறைகளின் பொருட்டு கலைவாணர் அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கவுள்ள உறுப்பினர்களுக்கான கரோனா பரிசோதனைக்கும் சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தயாராகிவந்த நிலையில், எம்எல்ஏ பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் தொகுதியின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனது ஆதரவாளர்களுடன் எம்எல்ஏ பிரபாகரன் கடந்த வாரம் தெருத்தெருவாக உலா வந்தார். மேலும் வெளியூர் பயணம், இதர பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில், 2 நாட்களாகவே அவருக்கு உடல்நிலை குன்றியுள்ளது. நேற்,று பாடாலூரில் நடைபெற்ற இல்லம் தேடி கல்வி நிகழ்வில் பங்கேற்றவரின் உடல் பாதிப்பு அதிகரிக்கவே, உடனடியாக கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

பரிசோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. இதையடுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபாகரனின் உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எம்எல்ஏவுடன் பொதுநிகழ்வில் பங்கேற்றவர்களும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வேகமாக பரவும் கரோனா திரிபு வைரஸ்களின் மத்தியில், நாளை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யபட்டிருப்பது, இதர உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், சட்டப்பேரவையில் பங்கேற்கும் முன்பே அனைத்து உறுப்பினர்களும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

x