மக்களவை தேர்தலில் திமுகவின் ‘பி’ டீமாக செயல்பட்ட பழனிசாமி: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு


தஞ்சாவூர்: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் ஆட்சிதான், கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலம் அழுத்தம் கொடுத்து, கர்நாடகாவில் இருந்துதமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரட்டை இலை சின்னம், பண பலம் இருந்தும் அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. கட்சியின் வாக்கு வங்கி13 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பழனிசாமி, திமுகவின் ‘பி’ டீமாக செயல்பட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகத்தான் அவர் வேட்பாளர்களை நிறுத்தினார். ஆனாலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 சதவீத வாக்கு பெற்றுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேஜகூசார்பில் வேட்பாளரை நிறுத்தி, வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறினார்