தமிழக அரசின் ‘பொங்கல் பரிசுத் தொகுப்பு’ வரவேற்கத்தக்கது!


பொங்கல் பரிசுத் தொகுப்பை பார்வையிடும் அதிகாரிகள்

தமிழக அரசு வழங்கும் ‘பொங்கல் பரிசுத் தொகுப்பு’ வரவேற்கத்தக்கது என, மத்திய உணவுத் துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம், உதகையில் பொது விநியோகத் திட்டம் மற்றும் ரேஷன் கடையை, மத்திய உணவுத் துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே தலைமையில் ஆய்வு செய்யும் கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் பேசும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 403 நியாயவிலைக் கடைகள் உள்ளன. அவற்றில் 298 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 105 பகுதிநேர கடைகள் மற்றும் 33 நடமாடும் நியாயவிலைக் கடைகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் தமிழ்நாடு உணவுப் பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் 6 கிடங்குகள் உள்ளன.

அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளை தணிக்கை மேற்கொண்டு, மொத்தம் உள்ள 16,624-ல் 7,610 குடும்ப அட்டைதாரர்கள். பொருளாதாரத்தில் மேம்பட்ட நிலையில் உள்ளதால், இத்திட்டத்திலிருந்து நீக்கம் செய்து, முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டை வகைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

ஆய்வுக் கூட்டம்

கூட்டத்தில், மத்திய உணவுத் துறை செயலாளர் சுபான்ஷூ பாண்டே பேசியதாவது: “அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளை தணிக்கை மேற்கொண்டது போலவே, முன்னுரிமை குடும்ப அட்டைகளை தணிக்கை மேற்கொண்டு, முன்னுரிமை இல்லாத குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து, உண்மைத்தன்மையின் அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் பெறாத அரிசி, குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து அட்டைதாரரின் விருப்பத்தின் பேரில் எப்பொருளும் வேண்டாத குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிமாநிலத்தவர்ரும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தின்கீழ் பயன்பெற ‘மேரா ரேஷன்’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தேசிய உணவு பாதுகாப்பு திட்டம், பிரதமரின் கரீப் கல்யான் அன்னயோஜனா திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து அரிசி கொள்முதல் மும்மடங்காக உயர்ந்துள்ளது. 9 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 29 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்முதல் உயர்ந்துள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் ‘மேரா ரேஷன்’ செயலியை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி 13 மொழிகளில் உள்ளதால் பயன்படுத்துவது எளிது” என்றார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய உணவுக் கழகப் பொது மேலாளர், இந்திய உணவுப்பொருள் தென் மண்டல பொது மேலாளர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ராஜாராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

x