இயல்பிலேயே ஆன்மிகப் பற்று கொண்டவரான ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, இப்போதெல்லாம் கட்சிப் பணிகளைவிடவும் ஆன்மிகத்தில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார். அவரது மருமகளுக்கு உடல்நலம் குன்றி குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் விரைவில் நலம்பெற வேண்டி சிறப்புப் பிரார்த்தனைகளில் வசுந்தராவும் அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டனர். அதைத் தாண்டியும் பல ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை வசுந்தரா மேற்கொள்கிறார்.
மாநில பாஜகவில் அவர் இழந்துவரும் செல்வாக்கை மீட்டெடுப்பதுதான் இந்த ஆன்மிகப் பற்றின் பின்னணியில் இருக்கும் அரசியல் நோக்கம் என்கிறார்கள் அவரது எதிர்ப்பாளர்கள். ஆனால், தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சியைப் பலப்படுத்தவே முயல்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
ராஜஸ்தான் பாஜகவில் அவர் தொடர்ந்து ஓரங்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின்றன. தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவரது உருவம் பொறித்த போஸ்டர்கள் அகற்றப்படுவது வரை அவர் மீது புறக்கணிப்புகள் தொடர்கின்றன. வல்லப்நகர், தரியாவத், ராஜ்ஸமந்த் ஆகிய தொகுதிகளில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பங்கேற்கவில்லை. கட்சியின் முக்கியக் கூட்டங்களிலும் அவர் தலைகாட்டவில்லை.
மறுபுறம், அவரது தரப்பில் அரசியல் காய்நகர்த்தல்களை அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறார்கள். 2023-ல் ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்குள் தன் பிடியை இறுக்கிக்கொள்ளும் முயற்சிகளில் அவர் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, கட்சி எனும் அளவில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வகையிலும் தன்னுடைய பிம்பத்தைக் கட்டமைக்கும் வேலைகளில் அவர் மும்முரம் காட்டுகிறார். கரோனா இரண்டாவது அலையின்போது, ராஜஸ்தான் பாஜகவினர், நிவாரணப் பணிகளை மேற்கொண்டபோது வசுந்தரா சார்பில் ‘வசுந்தரா ஜன ரசோய்’ எனும் பெயரில் ஏழைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆன்மிகப் பயணங்களுடன், மரணமடைந்த பாஜகவினரின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறுவது உள்ளிட்ட பணிகளையும் செய்துவருகிறார். இவற்றை வைத்து, இன்னமும் அவர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்குடன் தான் இருக்கிறார் என்பதை உணர்த்துவதில் அவரது ஆதரவாளர்கள் மும்முரமாக ஈடுபடுகின்றனர்.
ஆனால், 2023 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக வசுந்தரா முன்னிறுத்தப்படக் கூடாது எனக் கட்சிக்குள் இருக்கும் அவரது எதிர்ப்பாளர்கள் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். டிசம்பர் 22-ல், ஜெய்ப்பூரில் ‘ஸ்ரீ சத்ரிய யுவக் சங்’ எனும் பெயரில் சுமார் 5 லட்சம் ராஜபுத்திரர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் வசுந்தரா ராஜே பங்கேற்கவில்லை. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஜெய்ப்பூர் இளவரசி தியா குமாரி போன்றோர் பங்கேற்ற அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வசுந்தராவுக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்பதுதான் அவரது ஆதரவாளர்களுக்கு மேலும் அதிர்ச்சி தந்திருக்கிறது. மறுபுறம், அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர்தான் நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்துவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ராஜபுத்திரர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதை ஒருபோதும் புறக்கணித்தவர் அல்ல வசுந்தரா. இப்போது அதில் பங்கேற்பதை அவர் தவிர்த்தாரா அல்லது தவிர்க்கப்பட்டாரா எனும் கேள்விகள் சுழன்றடிக்கின்றன. இனி ராஜபுத்திரர்களின் தலைவர் எனும் அந்தஸ்து வசுந்தராவிடமிருந்து கஜேந்திர சிங் ஷெகாவத்துக்குச் சென்றுவிடுமா எனும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன.
பொதுவாகவே, ஒரு கட்சிக்குள் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தலைவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு இடையில், ஏதேனும் ஒருகட்டத்தில் போட்டி தொடங்கிவிடும் என்பார்கள் அரசியல் பார்வையாளர்கள். தற்போது கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கும் வசுந்தராவுக்கும் இடையில் அந்தப் போட்டி உச்சமடைந்திருப்பதாகவே கருதப்படுகிறது.
ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் அரசு நடக்கிறது. அங்கு மீண்டும் பாஜகவை வெற்றிபெறவைக்க, பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், தரியாவத், வல்லப்நகர் இடைத்தேர்தல்களில் காங்கிரஸுக்குக் கிடைத்த பெரும் வெற்றி பாஜகவை அதிரவைத்திருக்கிறது. வெறும் தோல்வி மட்டுமல்ல அது. வாக்குகளின் எண்ணிக்கையில், தாரியாவாத் தொகுதியில் பாஜக 3-ம் இடத்திலும், வல்லப்நகர் தொகுதியில் 4-ம் இடத்திலும் பாஜக இருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுடன் வசுந்தரா கட்சி எல்லை கடந்து நட்புறவு கொண்டிருக்கிறார் எனும் குற்றச்சாட்டு பாஜகவுக்குள் உண்டு. அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க, சச்சின் பைலட்டும் பாஜகவினரும் எடுத்த முயற்சிகளின் நடுவே வசுந்தரா அமைதியாக இருந்ததும் பாஜகவினர் மத்தியில் விமர்சனங்களைக் கிளப்பியது.
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, ராஜஸ்தானின் ஜாலூர் மாவட்டத்துக்கு நர்மதை நதி நீரைக் கொண்டுசெல்லும் கால்வாய் திட்டம் இரு மாநிலங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் வெற்றிக்கு யார் காரணம் என்பதில் குஜராத்தின் அப்போதைய முதல்வர் மோடிக்கும், ராஜஸ்தானின் அப்போதைய முதல்வர் வசுந்தராவுக்கும் இடையில் ஈகோ யுத்தம் நடந்தன. 2014 மக்களவைத் தேர்தலில் வென்று மோடி பிரதமரானபோது, வசுந்தராவின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், அவரது எதிரணியினருக்குப் பொறுப்புகளை மோடி வழங்கினார். அமித் ஷா விஷயத்திலும் வசுந்தராவுக்குச் சில கசப்புகள் உண்டு. தனது மகன் துஷ்யந்துக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என வசுந்தரா கோரியபோது மோடியும் அமித் ஷாவும் மறுதலித்துவிட்டனர்.
சச்சின் பைலட்டைக் காங்கிரஸிலிருந்து இழுப்பதன் மூலம் பாஜகவில் வசுந்தராவின் செல்வாக்கைக் குறைக்கவும் முயற்சிகள் நடந்தன. எனினும், மத்திய பிரதேச காங்கிரஸிலிருந்து, வசுந்தராவின் மருமகன் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவுக்குத் தாவியதைப் போல, ராஜஸ்தான் காங்கிரஸிலிருந்து சச்சின் பைலட் பாஜகவுக்குத் தாவுவார் எனும் கணிப்புகள் பொய்த்துவிட்டன. இப்போதும் சச்சின் பைலட் மனக்கசப்புடன் தான் காங்கிரஸுக்குள் இருக்கிறார் என்பது வேறு விஷயம். ஆனாலும், அந்த அஸ்திரம் தங்களுக்குக் கிடைக்காததில் பாஜக மேலிடம் இன்னமும் அதிருப்தியில்தான் இருக்கிறது.
எல்லாவற்றையும் தாண்டி, வசுந்தரா மீண்டும் பலம்பெற அவரது ஆன்மிக பலம் கைகொடுக்குமா எனக் காத்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்!