தூத்துக்குடி நீதிமன்ற வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்!


மாரிதாஸ்

தூத்துக்குடி நீதிமன்ற வழக்கையும் ரத்து செய்யக்கோரி யூடியூபர் மாரிதாஸ், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது::

‘திமுகவினர் வீடுகளில், ‘நோ சிஏஏ (குடியுரிமை திருத்த சட்டம்)’ என கோலம் வரைந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் திமுக- பாகிஸ்தான் சேர்ந்து வரைந்த கோலம் என திமுக மீது அவதூறு பரப்பியதாக, என் மீது தூத்துக்குடி 3-வது நீதித் துறை நடுவர் மன்றத்தில், திமுக மாணவரணி மாநில நிர்வாகி உமரிசங்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை தொடர முகாந்திரம் இல்லை. அவதூறு கருத்துகளை நான் பதிவிடவில்லை. எனவே, வழக்கை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாரிதாஸின் வழக்கறிஞர் வாதிடும்போது, “மனுதாரர் ஒரு அரசியல் விமர்சகர். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளார். புகார்தாரர் உமரி சங்கர் குறித்துப் பதிவில் மனுதாரர் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, வழக்கை ரத்துசெய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இதையடுத்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உமரிசங்கர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜன.19-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

x