ஊரடங்கு காலத்தில் களப்பணி ஆற்றிய போலீஸார் பலர், கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். முன்களப் பணியாளரான போலீஸாரின் பணியைப் பாராட்டும் விதமாக, ‘சோ ரீல் சேனல்’ நிறுவனம், வைரஸ் காவல் என்றொரு குறும்படத்தைத் தயாரித்துள்ளது.
இதற்கு மதுரை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ராஜ்குமார் கதை எழுதிப் பாடலும் பாடியுள்ளார்.
மூன்று நிமிடங்கள் அளவில் ஓடும் வைரஸ் காவல் குறும்படம், மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இக்குறும்படத்தைத் தயாரித்த ஜெகதீஷ் குழுமத்தினர் மற்றும் கதை, பாடல் எழுதிய காவலர் ராஜ்குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கேடயம் வழங்கி கவுரவப்படுத்தினார்.
விழாவில் மதுரை செய்தியாளர்கள் சங்க தலைவர் எஸ். கதிரவன், திரைப்பட இயக்குநர் ஹரி உத்ரா, மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் நவீன் குமார், சமூக ஆர்வலர்கள் பிரகாஷ் பாரதி முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினார்கள்.