ஆசிஷ் மீஸ்ரா மீதான குற்றப்பத்திரிகை கூறுவது என்ன?


மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா (நடுவில் இருப்பவர்)

லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் உத்தர பிரதேச காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு, 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் இன்று (ஜன.3) தாக்கல் செய்திருக்கிறது.

பெரிய ட்ரங்க் பெட்டியில் வைக்கப்பட்டு இந்தக் குற்றப்பத்திரிகை நகல்கள், லக்கிம்பூர் நகர நீதிமன்றத்துக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டன. அந்தப் பெட்டிக்கு இரண்டு பூட்டுகளும் போடப்பட்டிருந்தன.

மத்திய உள் துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா பிரதானக் குற்றவாளியாக இடம்பெற்றிருக்கிறது. மேலும் 15 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் அஜய் மிஸ்ராவுக்கு மிகவும் நெருக்கமானவரும் உறவினருமான வீரேந்திர சுக்லாவின் பெயரும் அடக்கம்.

2021 அக்டோபர் 3-ல் நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இந்தக் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் பாலியா நகரில் நடந்த கூட்டத்தில், அஜய் மிஸ்ராவுடன் உத்தர பிரதேசத் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவும் கலந்துகொள்ளவிருந்தார். அங்கு செல்லும் வழியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் பேரணி நடந்துகொண்டிருந்தது. எனவே, கேசவ் மவுரியா உள்ளிட்டோர் செல்ல வேண்டிய பாதையும் மாற்றப்பட்டது. எனினும், வேண்டுமென்றே அதே பாதையில் தனது வாகனத்தைக் கொண்டுசெல்ல ஆசிஷ் மிஸ்ரா திட்டமிட்டார் எனக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் அலைபேசி அழைப்புகள், வாட்ஸ்-அப் உரையாடல்கள், சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குற்றப்பத்திரிகையில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் என ‘ஆஜ் தக்’ போன்ற இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. சம்பவம் நடந்தபோது ஆசிஷ் மிஸ்ராவின் ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். அது தொடர்பான தகவல்களும் குற்றபத்திரிகையில் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிகிறது.

ஆரம்பத்தில், ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் சென்ற வாகனத்தை விவசாயிகள் மறிக்க முற்பட்டதால் நேர்ந்த விபத்தில்தான் விவசாயிகள் உயிரிழந்தனர் எனச் சித்தரிக்க அஜய் மிஸ்ரா தரப்பு முயன்றது. பல பாஜக தலைவர்களும் அப்படித்தான் கூறிவந்தனர். ஆனால், சாலையில் செல்லும் விவசாயிகள் மீது ஆசிஷ் மிஸ்ரா சென்ற வாகனம் மோதித் தள்ளிய காட்சிகள் காணொலியாக வெளிவந்த பின்னர்தான் பல விஷயங்கள் வெளியுலகுக்குத் தெரியவந்தன.

ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டபோதும், ஆசிஷ் மிஸ்ரா உடனடியாகக் கைதுசெய்யப்படவில்லை. ஒருவாரம் கழித்து, அதுவும் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னர்தான் அவர் கைதுசெய்யப்பட்டார்.

விசாரணையில் திருப்தி இல்லை

தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் விவசாயிகள் தரப்பு வழக்கறிஞரான முகமது அமான், “ஆரம்பத்தில், அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பெயரும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், அவரது பெயர் எஃப்.ஐ.ஆரில் பதிவுசெய்யப்படவில்லை. அவரது பெயரையும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்க வேண்டும் என சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால், அது நடக்கவில்லை. எனவே முறைப்படி விசாரணை நடந்திருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. இந்த விசாரணையில் எங்களுக்குத் திருப்தி இல்லை” என்று கூறியிருக்கிறார். முறைப்படி விசாரணை நடக்க வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

பழைய குற்றச்சாட்டுகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகளை மிரட்டும் வகையில் அஜய் மிஸ்ரா பேசிய காணொலிகளும் வைரலாகியிருந்தன. டிசம்பர்15-ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த அஜய் மிஸ்ரா, விசாரணைக் குழு அறிக்கை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம் கடும் கோபம் காட்டியது மேலும் சர்ச்சையை எழுப்பியது. பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்ததுடன், அவர்களைத் தாக்கவும் முற்பட்டார் எனப் புகார்கள் எழுந்தன. அதுதொடர்பான காணொலியும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

அஜய் மிஸ்ரா மீது ஏற்கெனவே வேறு சில புகார்களும் உண்டு. 2003-ல் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் திகுனியா பகுதியில் பிரபாத் குப்தா எனும் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என கூடுதல் அமர்வு நீதிமன்றம் அஜய் மிஸ்ரா உள்ளிட்டோரை விடுவித்தது. எனினும், அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி அரசும், கொல்லப்பட்ட பிரபாத் குப்தாவின் குடும்பத்தினரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கு விசாரணை இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

விமர்சனக் கணைகள்

விரைவில் உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், லக்கிம்பூர் கெரி விவகாரம் மீண்டும் விவாதம் பெரிய அளவில் வெடிக்கும் எனத் தெரிகிறது. பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகவைக் குறிவைத்து விமர்சனக் கணைகளைத் தொடுத்துவருகிறார்கள்.

x