ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் வாரன்ட் இன்றி சோதனை நடத்தியது ஏன்?


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்துவரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில், வாரன்ட் இல்லாமல் சோதனை நடத்தியது ஏன்? என மதுரை மாவட்ட எஸ்பி தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பல்வேறு மோசடி வழக்குகளில் போலீஸார் தேடி வருகின்றனர். அவரின் உறவினர்கள், நண்பர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘விசாரணை என்ற பெயரில் தங்கள் குடும்பத்தாரை தொந்தரவு செய்யக்கூடாது’ என போலீஸாருக்கு உத்தரவிடக்கோரி ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லெட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கறிஞர் மாரீஸ்குமார் ஆஜராகி, “ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞராக இருப்பதால், என் வீட்டில் உரிய அனுமதியில்லாமல் டிச.29-ல் போலீஸார் சோதனை நடத்தினார்கள்” என நீதிபதியிடம் தெரிவித்தார்.

“வழக்கறிஞர் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினீர்களா? வாரன்ட் இருந்ததா?” என நீதிபதி கேட்டதற்கு,

இதையடுத்து அவரிடம், “ராஜேந்திர பாலாஜி தற்போது எங்கிருக்கிறார்?” என நீதிபதி கேட்டார். அதற்கு, ‘‘உச்ச நீதிமன்றத்தில் இன்று அல்லது நாளை ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகே அவர் இருப்பிடம் தெரியும்” என்றார்.

பின்னர், “ராஜேந்திர பாலாஜி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பதற்காக, வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தியது சரியல்ல” என்ற நீதிபதி, சோதனையில் ஈடுபட்ட சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலனிடம் செல்போனில் பேசி, ‘‘யார் அறிவுறுத்தலின் பேரில் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தினீர்கள்?” என கேட்டார்.

அதற்கு ஆய்வாளர் சிவபாலன், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், வழக்கறிஞரின் வீட்டில் சோதனை நடத்தியதாக தெரிவித்திருக்கிறார்.

பின்னர், “வழக்கறிஞர் வீட்டுக்குள் சென்று சோதனை நடத்தினீர்களா? வாரன்ட் இருந்ததா?” என நீதிபதி கேட்டதற்கு, ‘‘வாரன்ட் இல்லை’’ என ஆய்வாளர் பதிலளித்தார்.

இதையடுத்து, “வழக்கறிஞர் வீட்டில் நடத்திய சோதனை விவரங்களையும், மதுரை நகர் பகுதியிலுள்ள வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்த சோழவந்தான் காவல் ஆய்வாளரை அனுப்பியது குறித்தும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை ஜன.7-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

x