கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை


சென்னை: கடந்தாண்டு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிப்பதாவது:

கடந்தாண்டு கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா பயிர் கடன்பெற்ற விவசாயிகள் கடனை 8 மாத தவணைக்குள் திருப்பி செலுத்தியிருக்க வேண்டும், ஆனால் கடந்தாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்டது.குறுவை சாகுபடி அரசின் இலக்கை தாண்டி செய்யப்பட்டது.

அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் ஜனவரி 28-ம் தேதி மூடவேண்டிய மேட்டூர் அணை அக்டோபர் 10-ம் தேதியே மூடப்பட்டது. இதனால் பின்பட்ட குறுவைக்கு போதிய தண்ணீரின்றி பல இடங்களில் பயிர்கள் கருகி, மகசூல் இழப்பு ஏற்பட்டது. சம்பா சாகுபடி பெரியளவில் கூட நடைபெறவில்லை.

இதனால் சாகுபடிபாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பலர் கடன்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, விவசாயிகள் கூட்டுறவுவங்கிகளில் வாங்கிய பயிர்க் கடனை உரிய காலத்தில் கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் சுமையை குறைத்திடும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள வட்டியில்லா கடன்கள் தவணை தவறியவற்றுக்கான வட்டியைதள்ளுபடி செய்ய வலியுறுத்துகிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

x