ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்றனர்


இலங்கை கடற்படையைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும், கடந்த 2 வார காலமாக வேலைநிறுத்தம் செய்துவந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் சென்றனர்.

எல்லை கடந்து மீன்பிடிப்பதாக இந்திய மீனவர்களை கைது செய்வதை இலங்கை வழக்கமாகவே வைத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு கரோனா தடுப்பு நடவடிக்கை எனும் பெயரில், நமது மீனவர்களின் உடல் முழுதும் கிருமிநாசினியை தெளித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டது இலங்கை.

இதைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் கடந்த 11 நாட்களுக்கும் மேலாக கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அடுத்த சில நாட்களில், அவர்களோடு மண்டபம் மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

இந்நிலையில் கடந்த டிச.30-ம் தேதி மாவட்ட ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை அடுத்து, மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப்பெற்று, ஜன.3-ம் தேதி கடலுக்குச் செல்வோம் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று உரிய அனுமதியுடன் சுமார் 500 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x