சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


சாட்டை துரைமுருகன்

திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாட்டை துரைமுருகனை, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறை கைதுசெய்திருக்கிறது.

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சாட்டைதுரைமுருகன், சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்தார். அடுத்து, தனது சாட்டையூடியூப் தளத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டதில், பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 9 பெண்கள் உயிரிழந்துவிட்டதாகப் பேசியிருந்தார்.

இந்த வீடியோதான் பாஸ்கான் ஊழியர்களின் போராட்டம் தீவிரமடையக் காரணம் என்றும் பொய்யான தகவலை பரப்பி கலவரத்தைத் தூண்டினார் என்றும் கடந்த டிச.19-ம் தேதி திருச்சியில் வைத்து சாட்டை துரைமுருகனை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது திருவள்ளூர் காவல் துறையினர் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி சாட்டை துரைமுருகன் திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடுவது குறித்து காவல் துறையினர் ஆலோசனை நடத்தி வருவதாக, சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று(ஜன.3) அவருடைய ஜாமீன் விசாரணைக்கு வரும் நிலையில், அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட எஸ்பி வருண்குமார் பரிந்துரைத்தார். அதன்பேரில் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சாட்டை துரைமுருகன் திருவள்ளூர் கிளைச் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை, நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

x