2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் `மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் தொடக்கம்


சென்னை: தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மண்வளத்தை பேணிக்காக்கவும், மக்கள் நலன் காக்கும் வகையில் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளை ஊக்கப்படுத்திடவும், ரூ.206 கோடியில் 22 இனங்களுடன் ‘முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று 2024-25-ம் ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், முதல் இனமாக பசுந்தாள் உரவிதை விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. பசுந்தாள் உரப் பயிர்கள் மூலம் மண்வளம் பேணி காக்கப்பட்டு, மண்ணில் வாழும் நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்பட்டு, உயிர்ம முறையில் மண்ணின் சத்துக்கள் அதிகரிக்கப்படும். இதனால் வேளாண் விளைபொருட்களின் தரம் மேம்பட்டு, மக்களின் நலம் பேணி காக்கப்படும்.

மண்ணில் வளர்ந்து, மண்ணிலே மக்கி, மண்ணின் வளம் பெருக்குவது பசுந்தாளுரப் பயிர்கள். இதன் சாகுபடியை விவசாயிகளிடத்தில் ஊக்குவித்திட ஆயக்கட்டு மற்றும் இறவைப் பாசன பகுதிகளில் முதற்கட்டமாக 2024-25-ம் ஆண்டில் 2 லட்சம் ஏக்கரில் ரூ.20 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி, ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர்.

வட்டார அளவில் வேளாண் பணிகளைத் தங்குதடையின்றி மேற்கொள்வதற்காக வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 90 டிராக்டர்கள், 180 கொத்துக் கலப்பைகள், 90 ரோட்டவேட்டர்கள் ஆகியவற்றை அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்கிடும் வகையில் டிராக்டர்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்கு திறன்வாய்ந்த ஓட்டுநர்களை உருவாக்கிட டிராக்டர், அறுவடை இயந்திரங்கள் ஆகியவற்றை இயக்குவதற்கும், கையாள்வதற்கும் 500 ஊரக இளைஞர்களுக்கு வேலூர், கோவை, திருச்சி, மதுரை, திருவாரூர், திருநெல்வேலி ஆகிய இயந்திர பணிமனைகளில் இயந்திரங்களை இயக்குவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர்களை இயக்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கான டிராக்டர்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

x