தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
சென்னையின் மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு வசதிகளுக்காக, முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை காவல் ஆணையரகத்தைப் பிரித்து தாம்பரம், ஆவடி என 2 புறநகர் காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அதிகாரிகளாக ஏடிஜிபிக்கள் ரவி, சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டு, அந்தந்த காவல் ஆணையரகங்கள் அமைப்பதற்கான இடம், காவல் மாவட்டங்கள் மற்றும் காவல் நிலையங்களைப் பிரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
புதிய காவல் ஆணையரகங்களை உருவாக்குவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், இன்று தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களை முதல்வர் மு.க ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு சிறப்பு அதிகாரிகளாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்த, ஏடிஜிபி ரவி மற்றும் ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரைக் காவல் ஆணையர்களாக நியமித்து, உள்துறைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.