முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகத் திருப்பத்தூர், தருமபுரியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளைத் தனிப்படை காவல் துறையினர் 3 நாட்கள் விசாரணைக்குப் பின்பு விடுவித்தனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை 2 வழக்குகள் பதிவுசெய்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே, அவரைக் கைதுசெய்ய 8 தனிப்படைகள் அமைத்து 2 வாரத்துக்கும் மேலோக காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
அவருடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் அவரது நெருங்கிய உறவினர், அதிமுகவினர் உட்பட நண்பர்களின் அலைபேசி அழைப்புகளை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்துவந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக திருப்பத்தூர் பகுதி அதிமுக பிரமுகர்கள் விக்னேஸ்வரன், ஏழுமலை ஆகியோரிடம் தனிப்படை காவல் துறையினர் கடந்த டிச.28-ம் தேதி விசாரணை நடத்தினர்.
அதேபோல், தருமபுரியைச் சேர்ந்த பொன்னுவேல், ஆறுமுகம் ஆகியோரிடமும் தனிப்படை காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த 4 பேரையும் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் இந்தச் செயலைக் கண்டித்தும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அதிமுக நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், திருப்பத்துார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், தனிப்படை காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்கள் தனிப்படையினர் நடத்திய விசாரணை முடிந்து, அதிமுக பிரமுகர்கள் 4 பேரும் நேற்று (டிச.31) விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.மேலும், ராஜேந்திர பாலாஜியின் வழக்கு குறித்து அவருக்கு நெருக்கமானவர்களிடம் தனிப்படை காவல் துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அவரைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.